தெரு வியாபாரிகள் பாதுகாப்பு சட்டத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும் : தமிழக அரசுக்கு ஏஐடியுசி வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

தெரு வியாபாரிகள் பாதுகாப்பு சட்டத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தி ஏஐடியுசி தெரு வியாபாரிகள் தொழிலாளர் சங்க மாநில பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தஞ்சாவூர் ஏஐடியுசி அலுவலகத்தில், ஏஐடியுசி தமிழ்நாடு தெரு வியாபார தொழிலாளர் சங்க மாநில பொதுக்குழுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு, மாநிலத் தலைவர் சி.சந்திரகுமார் தலைமை வகித்தார். பொருளாளர் ஆர்.பி.முத்துக்குமரன் வரவேற்றார். ஏஐடியுசி மாநில பொதுச் செயலாளர் டி.எம்.மூர்த்தி, தற்போதைய தொழிலாளர்களின் பிரச்சினைகள் குறித்து பேசினார்.

கூட்டத்தில், தெரு வியாபாரிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாத்தல், வியாபாரத்தை முறைப்படுத்துதல் சட்டத்தை 2014-ம் ஆண்டு மத்திய அரசு கொண்டுவந்தது. இந்த சட்டத்தை மாநிலங்களில் அமல்படுத்துவதற்கான சட்ட விதிமுறைகளையும் உருவாக்கிஉள்ளது. இந்த சட்டத்தை தமிழக அரசு 2.11.2015 அன்று அரசிதழில் வெளியிட்டு அமல்படுத்தியது. ஆனால், அந்த சட்டம் குறித்து காவல் துறை, நெடுஞ்சாலைத் துறை மற்றும் உள்ளாட்சித் துறை அதிகாரிகளுக்கு தனியாக பயிற்சி அளிக்காததுடன், இந்த சட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படவில்லை.

இதன் காரணமாக, தெரு வியாபாரிகளை விரட்டுவது, வெளியேற்றுவது, வியாபார பொருட்களை சேதப்படுத்துவது என காவல் துறையினரின் அத்துமீறல்கள் இந்த சட்டத்துக்கு எதிராக வழக்கம்போல தொடர்ந்து கொண்டிருக்கிறது. சட்டத்தின் பயன்களை வியாபாரிகள் முழுமையாக பெற முடியாத நிலை நீடிக்கிறது. எனவே, தெரு வியாபாரிகள் பாதுகாப்பு சட்டத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும்.

குறிப்பாக, இந்த சட்டம் அமலுக்கு வந்த பிறகு தெருவில் வியாபாரம் செய்வதை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ள நகர வணிகக் குழுவை முறைப்படுத்த வேண்டும்.

கரோனா காலத்தில் தெரு வியாபாரிகளுக்கு வழங்கப்பட்ட கடன் உதவித்தொகையை முறையாக திருப்பிச் செலுத்தியவர்களுக்கு தொடர்ந்து கடனுதவி வழங்க வேண்டும்.

மத்திய அரசை கண்டித்து செப்.27-ம் தேதி நடைபெறவுள்ள முழு வேலைநிறுத்தப் போராட்டத்தில் முழுமையாக பங்கேற்பது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்