வலங்கைமான் அருகே கீழவிடையல் ஊராட்சியில் ஆக்கிரமிப்பில் உள்ளதாக புகார் தெரிவிக்கப்பட்ட 11 ஊராட்சி குளங்களில் மீன்பாசி குத்தகைக்கு செப்.8-ம் தேதி பொது ஏலம் விடப்படுவதாக ஊராட்சி மன்றம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஊராட்சி ஒன்றியம் கீழவிடையல் ஊராட்சியில், தனியார் ஆக்கிரமிப்பில் உள்ள குளங்களை பொது ஏலத்தில் விட வேண்டும் என தமிழக முதல்வருக்கு கிராம மக்கள் அண்மையில் புகார் தெரிவித்திருந்தனர்.
இதையடுத்து, அங்குள்ள குளங்களை ஏலம் விடுவதற்கு ஊராட்சித் தலைவர் விமலா மூலமாக வலங்கைமான் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி, கீழவிடையல் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் செப்.8-ம் தேதி முற்பகல் 11 மணியளவில், வீரன்குளம், மேலத்தெரு ஊரணி குளம், பிள்ளையார் கோவில் குளம், கருப்பூர் நத்தம் குளம், தட்டான் தெரு குளம், கருப்பூர் பிரதான சாலை குளம், துறையூர் முருகன் கோயில் அருகேயுள்ள பிரதான சாலை குளம், ஆசாரி தெரு குளம், அய்யனார் கோயில் குளம், வீச்சூர் குளம் மற்றும் குண்டாச்சி குளம் ஆகிய 11 குளங்களின் மீன்பாசி குத்தகைக்கு பகிரங்க பொது ஏலம் விடப்படுவதாக, ஊராட்சி மன்றம் சார்பில் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.
ஏலம் கேட்பவர்கள் அன்றைய தினம் காலை 11 மணிக்குள் வர வேண்டும், ரூ.1,000 முன்வைப்புத் தொகை செலுத்தியவர்கள் மட்டுமே ஏலத்தில் பங்கேற்க முடியும். ஏலத் தொகையை உடனடியாக செலுத்த வேண்டும். ஏலத்தை மாற்றி வைப்பதோ அல்லது ரத்து செய்வதோ ஊராட்சி மன்றத் தலைவரின் முடிவுக்கு உட்பட்டது என்பன போன்ற நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த அறிவிப்பால் அந்த கிராம மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago