ஸ்டெர்லைட் ஆலையை திறக்க சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும் : ஆதரவாளர்கள், பல்வேறு அமைப்புகள் வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும் என மகளிர் குழுவினர் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளன.

தூத்துக்குடி துளசி அறக்கட்டளை தலைவர் தனலட்சுமி, தாயகம் அறக்கட்டளை தலைவர் ஜெயக்கனி, தெற்கு வீரபாண்டியபுரம் ஊராட்சி முன்னாள் தலைவர் பொன்ராஜ், ஒப்பந்ததாரர் சங்கத் தலைவர் தியாகராஜன் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் நேற்று கூட்டாக செய்தியாளர்களிடம் கூறியதாவது:

ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை செயல்பட தொடங்கிய காலத்தில் இருந்து மக்களுக்கு பலநன்மைகளை செய்து வருகிறது. 2018 போராட்டத்துக்கு பிறகு ஆலை மூடப்பட்டிருந்த நிலையிலும் சமூக வளர்ச்சிக்காக பல திட்டங்களை செயல்படுத்தி வந்தது.

இதன் மூலம், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் உதவிகள் மற்றும் சுயதொழில் பயிற்சி போன்ற பல நன்மைகள் கிடைத்துவந்தது. இதேபோல் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை, இளைஞர்களுக்கு திறன் வளர்ப்பு பயிற்சி, சுற்றியுள்ள கிராமங்களில் பல்வேறு அடிப்படை வசதிகள் எனபல திட்டங்களை ஸ்டெர்லைட் நிறுவனம் தொடர்ந்து செயல்படுத்தி வந்தது.

ஆனால், தற்போது அந்த செயல்பாடுகள் தடைபட்டிருப்பதால் பொதுமக்கள் மிகுந்த பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்ட பின் வேலையின்றி 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர்.

ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்களை அழைத்து கருத்து கேட்பது போல் ஆலை ஆதரவாளர்களிடமும் கருத்துகளை கேட்க வேண்டும். ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்ட பின் நாட்டின் தேவைக்கான தாமிரத்தை 100 சதவீதம் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்து வருகிறோம். ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால் பாகிஸ்தானில் தாமிர உற்பத்தி அதிகரித்துள்ளது. தூத்துக்குடியின் வளர்ச்சியே பின்தங்கி விட்டது. இந்நிலையில் ஆலையை நிரந்தரமாக மூட சிறப்புச் சட்டம்இயற்ற வலியுறுத்தி எதிர்ப்பாளர்கள் குழு ஆட்சியில் உள்ளவர்களை சந்தித்து வருகின்றனர்.

எங்கள் கருத்துக்கும் அரசு செவிசாய்க்க வேண்டும். ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தமிழக அரசு அனுமதி அளிக்க வேண்டும். இதற்காக சிறப்புச் சட்டம் இயற்ற வேண்டும் என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்