வேலூரில் தனியார் நிறுவன பங்கு தாரரின் டிஜிட்டல் கையெழுத்தை மோசடியாக பயன்படுத்தி ஏமாற்றியதாக தம்பதி மீது மாவட்ட குற்றப்பிரிவு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
வேலூர் மாவட்டம் காட்பாடி அருகேயுள்ள தேவனாம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் அருண். தனியார் பட்டய கணக்காயர் அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி லில்லி (29). அருண் பணியாற்றும் அலுவலகத்துக்கு வந்து செல்லும் வேலூர் விருபாட்சிபுரம் குளவிமேடு பகுதியைச் சேர்ந்த குமார் மற்றும் அவரது மனைவி மகாலட்சுமி ஆகியோருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர், இருவரும் குடும்ப நண்பர்களாக மாறியுள்ளனர்.
இதன் காரணமாக குமார் மற்றும் மகாலட்சுமி ஆகியோர் கூறியபடி மகாலட்சுமி பெயரில் இயங்கி வந்த தனியார் நிறுவனத்தில் பங்குதாரராக லில்லி சேர்ந்துள்ளார்.
இதற்கிடையில், லில்லியின் டிஜிட்டல் கையெழுத்தை மோசடியாக பயன்படுத்தி அவர் அந்த நிறுவனத்தில் இருந்து விலகி விட்டதாக மகாலட்சுமியும், அவரது கணவரும் ஆவணங்களை தயார் செய்துள்ளதாக கூறப்படுகிறது. அந்த நிறுவனத்தில் குமார் பங்கு தாரராக மாறியுள்ளார்.
இந்த மோசடி குறித்து தெரிய வந்ததும் அதிர்ச்சியடைந்த லில்லி, வேலூர் மாவட்ட குற்றப் பிரிவில் கடந்த 2-ம் தேதி புகார் அளித்துள்ளார். அதன்பேரில், குமார் மற்றும் மகாலட்சுமி ஆகியோர் மீது ஆய்வாளர் கவிதா மோசடி குற்றச்சாட்டின்கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago