இண்ட்கோசர்வ்‌ தேயிலை ஆலைகளை நவீனமயமாக்க ரூ.50.56 கோடி ஒதுக்கீடு :

By செய்திப்பிரிவு

நீலகிரி மாவட்டத்தில்‌ செயல்பட்டு வரும்‌ 10 இண்ட்கோசர்வ்‌ தேயிலைத்‌ தொழிற்சாலைகளை புதுப்பித்தல்‌ மற்றும்‌ நவீனப்படுத்துவதற்காக ரூ.50.56 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து இண்ட்கோசர்வ்‌ தலைமை செயல்‌ அலுவலர்‌ சுப்ரியா சாஹூ கூறியதாவது:

நீலகிரி மாவட்டத்தில் உள்ள 10 தேயிலை தொழிற்சாலைகளை நவீனப்படுத்த நபார்டு மற்றும்‌ தமிழக அரசின்‌ ஊரக உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதி திட்டத்தின்‌ கீழ்‌ நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தில் கரும்பாலம்‌, மேற்குநாடு, மகாலிங்கா, இத்தலார்‌, கட்டபெட்டு, பிராண்டியர்‌, கிண்ணக்கொரை, பிக்கட்டி, எப்பநாடு, பிதர்காடு ஆகிய 10 இண்ட்கோசர்வ்‌ தேயிலைத்‌ தொழிற்சாலைகள்‌ முழுமையான மேம்படுத்தல்‌ மற்றும்‌ நவீனமயமாக்கலுக்கு பயன்படுத்தப்படும்‌.

இத்திட்டத்தின்‌ வாயிலாக மேற்படி தொழிற்சாலைகளில்‌ தொடர்‌ ரசாயன பசுந்தேயிலை உலர்‌ இயந்திரங்கள்‌, ரோட்டார்வேன்‌, சிடிசி இயந்திரங்கள்‌, தொடர் பெர்மென்டிங்‌ இயந்திரங்கள்‌, டிரையர்‌ மற்றும்‌ அடுப்புகள்‌, உலர்த்திகள்‌, டர்போ வெண்டிலேட்டர்கள்‌ மற்றும்‌ இதர இயந்திரங்கள்‌, தொழிற்சாலைகளின்‌ கூரைகளை சீரமைத்தல்‌, கழிவறைகளை மேம்படுத்துதல்‌, தேநீர்‌ சுவை அறியப்படும்‌ கட்டமைப்பு வசதிகளை அதிநவீன தரத்துடன்‌ உருவாக்குதல்‌ போன்ற பணிகள்‌ மேற்கொள்ளப்படும்‌.

கடந்த 2020-21-ம்‌ ஆண்டில்‌ இந்த திட்டத்தின்‌ முதற்கட்டமாக கீழ்வரும் 5 இண்ட்கோசர்வ்‌ தேயிலைத்‌ தொழிற்சாலைகளை நவீனமயமாக்குவதற்காக ரூ.18.54 கோடி ஏற்கெனவே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில்‌ குந்தா, மஞ்சூர்‌, கைகாட்டி, பந்தலூர்‌, சாலிஸ்பரி இண்ட்கோ தொழிற்சாலைகள்‌ பயனடையும்‌. மேலும்‌, இத்திட்டத்தின்‌ வாயிலாக கைகாட்டி இண்ட்கோ தேயிலைத்‌ தொழிற்சாலையில்‌ ஆர்த்தோடாக்ஸ்‌ தயாரிப்பு இயந்திரங்கள்‌ பொருத்தப்பட்டு, சிடிசி மற்றும்‌ ஆர்த்தோடாக்ஸ்‌ தேயிலை ரகங்களை உற்பத்தி செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில்‌ இண்ட்கோசர்வ்‌ கீழ்‌ உள்ள 16 கூட்டுறவு தேயிலைத்‌ தொழிற்சாலைகளை நவீனமயமாக்குவதற்கு தமிழக அரசால்‌ இத்தகைய நிதி கணிசமாக ஒதுக்கீடு செய்யப்படுவது இதுவே முதல்முறை. நவீனமயமாக்கல்‌, சிறந்த தரம்‌ மற்றும்‌ தேயிலை உற்பத்தியை நோக்கிய மாற்றத்தின்‌ ஒரு சகாப்தத்தை உருவாக்கும்‌. இத்திட்டத்தின்‌ மூலமாக நீலகிரி மாவட்டத்தில்‌ உள்ள 30,000 சிறு தேயிலை விவசாயிகள்‌ தங்களது பசுந்தேயிலைக்கு நியாயமான விலை பெற்று பயனடைவார்கள்‌.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்