திருப்பூரில் கிராப்ட் காகிதத்தின் விலை, கடந்த ஒன்றரை ஆண்டு காலத்தில் 100 சதவீதம் அதிகரித்துள்ளதாக அட்டைப் பெட்டி உற்பத்தியாளர்கள் வேதனை தெரிவித்தனர்.
வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பின்னலாடைகளை பேக்கிங் செய்வதற்கு அட்டைப்பெட்டிகள் பயன்படுத்தப்படுகின்றன. இதனால் அட்டைப்பெட்டி தயாரிப்புத் தொழில் பின்னலாடைத் தொழிலின் உபதொழிலாக உள்ளதால், திருப்பூர் மட்டுமல்லாது, கோவை, ஈரோடு, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் இத்தொழில் நடைபெறுகிறது. திருப்பூரில் மட்டும் 200 அட்டைப்பெட்டி தயாரிக்கும் ஆலைகள் செயல்படுகின்றன.
கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் கிராப்ட் காகிதம் ஒரு டன் ரூ.20 ஆயிரம் வரை விற்பனையானது. கரோனா பொதுமுடக்கத்தால், இந்த தொழிலும் முடங்கியது. கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் கிராப்ட் காகிதத்தின் விலை ஒரே சமயத்தில் 40 சதவீதம் அதிகரித்தது. அதாவது டன்னுக்கு ரூ.10 ஆயிரம் வீதம் அதிகரித்து, ஒரு டன் விலை ரூ.35 ஆயிரம் ஆனது.
2021-ம் ஆண்டு மார்ச் மாதம் ரூ.38 ஆயிரமாக விலை அதிகரித்த நிலையில், கிராப்ட் காகிதத்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. கடந்த ஆகஸ்ட் மாதம் டன்னுக்கு ரூ.2,000 வரை விலை அதிகரித்துள்ளது. தற்போதைய விலையைக் கணக்கிட்டால் ஒன்றரை ஆண்டு காலத்தில், கிராப்ட் காகிதம் நூறு சதவீதம் விலை ஏறியுள்ளது. அத்துடன் அட்டைப் பெட்டி தயாரிக்கப் பயன்படும் பசைமாவு, பிரிண்டிங் மை ஆகிய உபபொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது என்று அட்டைப் பெட்டி உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் மேலும் கூறும்போது ‘‘மூலப்பொருட்களின் விலை, நூறு சதவீதம் உயர்ந்தபோதும், அட்டைப் பெட்டிக்கு உரிய விலை கிடைக்கவில்லை. கடந்த 2016-17-ம் ஆண்டில் இருந்து கணக்கிட்டால், இதுவரை 25 சதவீதம் அளவுக்குத்தான் அட்டைப் பெட்டி விலை உயர்த்தப்பட்டுள்ளது. எங்களுக்கு கட்டுப்படியான உரிய விலை கிடைக்கவில்லை. எனவே மத்திய, மாநில அரசுகள் இந்த தொழிலுக்கு மூலப்பொருள் விலை உயர்வைக் கட்டுப்படுத்தி, சீரான விலையில் கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டும்’’ என்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago