மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் கணவருக்கு 10 ஆண்டு சிறை :

காதல் மனைவியை வன்கொடுமை செய்து தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து திருப்பூர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

தஞ்சை மாவட்டம் பேராவூரணியை சேர்ந்தவர் முருகானந்தம் (27). அதே பகுதியை சேர்ந்தவர் வித்யா (26). காதலித்து, கலப்பு திருமணம் செய்துகொண்டனர். திருப்பூர் வீரபாண்டியில் தங்கி, பனியன் நிறுவனத்தில் தம்பதி வேலை செய்து வந்தனர். கடந்த 2013-ம் ஆண்டு நவம்பர், 27-ம் தேதி, தம்பதிக்கிடையே தகராறு எழுந்தது. இதில் வித்யா தீக்குளித்தார்.

பலத்த காயங்களுடன் திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்ட வித்யா, டிசம்பர், 5-ம் தேதி உயிரிழந்தார்.

இதுதொடர்பாக முருகானந்தம் மீது மனைவியை தற்கொலைக்கு தூண்டியதாக வீரபாண்டி போலீஸார் வழக்கு பதிந்தனர்.

இந்த வழக்கு திருப்பூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் நீதிபதி சொர்ணம் ஜெ. நடராஜன் நேற்று தீர்ப்பளித்தார். அதில், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் முருகானந்தத்துக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், மனைவியை தற்கொலைக்கு தூண்டியதற்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், மனைவியை கொடுமைப்படுத்தியதற்கு 3 ஆண்டுகளும், ரூ. 3,000 அபராதமும் விதித்தார். இந்த தண்டனையை ஏக காலத்தில் முருகானந்தம் அனுபவிக்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார். முருகானந்தம், கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில், வழக்கறிஞரை நியமித்துக் கொள்ளலாம் என்ற அரசின் உத்தரவின்படி, இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் ஏ. பாண்டியன் ஆஜராகியிருந்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE