மானாமதுரை அமமுக வழக்கறிஞர் மீது தாக்குதல் - திருப்பூர் நீதிமன்றத்தில் 4 பேர் சரண் :

By செய்திப்பிரிவு

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அடுத்த ராஜகம்பீரத்தைச் சேர்ந்தவர் குருமுருகானந்தம் (40). மானாமதுரை நீதிமன்றத்தில் வழக்கறிஞராக இருந்து வருகிறார். அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின், மாநில வழக்கறிஞர் பிரிவு இணை செயலாளராகவும் பொறுப்பில் உள்ளார்.

இந்நிலையில் அவரது வழக்கறிஞர் அலுவலகத்துக்குள் புகுந்த மர்மநபர்கள் நேற்று முன்தினம் அவரை வெட்டிவிட்டு தப்பினர். இதில், பலத்த காயமடைந்த குருமுருகானந்தம், உயிருக்கு ஆபத்தான நிலையில் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுதொடர்பாக சிவகங்கை போலீஸார் தனிப்படை அமைத்து விசாரித்து வருகின்றனர்.

சிசிடிவி கேமரா பதிவுகளைக் கொண்டு போலீஸார் விசாரித்து வந்த நிலையில், திருப்பூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண்-3-ல் அதிபதிராஜா (23), தினேஷ்குமார் (22), ராஜாமருது (22), அலெக்ஸ்பாண்டியன் (21) ஆகியோர் நேற்று சரணடைந்தனர். இவர்கள் 4 பேரும், சிவங்கங்கை மாவட்டம் திருபுவனம் பகுதியைச் சேர்ந்தவர்கள். வழக்கறிஞரை தாக்கியது தொடர்பாக போலீஸார் தேடுவதால், நீதிபதி சூர்யபிரபா முன்னிலையில் 4 பேரும் சரணடைந்தனர். இதையடுத்து, திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு, திருப்பூர் சிறைக்கு அழைத்துச் செல்ல நீதிபதி உத்தரவிட்டார். நீதிமன்ற வளாகத்தில் இருந்து அவர்களை போலீஸார் பாதுகாப்புடன் வெளியே அழைத்து வந்தபோது, வளாகத்தில் இருந்த வழக்கறிஞர்கள், ‘வழக்கறிஞர்களுக்கு பாதுகாப்பு கொடு, வழக்கறிஞர்களை தாக்கியவர்கள் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடு’ என தொடர்ந்து முழக்கங்கள் எழுப்பியதால், நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்