கீழ்பவானி பாசனத்திற்கு நீர் திறக்கப்படவுள்ள நிலையில், உப்புக்கரைசலில் இட்டு, விதை நேர்த்தி செய்தபின்னர் நெல் விதைப்பதன் மூலம், நல்ல மகசூலைப் பெறலாம் என வேளாண்மைத்துறை அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து நம்பியூர் வேளாண் உதவி இயக்குநர் முரளி கூறியதாவது:
நெற்பயிரை இலைப்புள்ளி, இலையுறைக் கருகல், இலையுறை அழுகல், குலைநோய் மற்றும் பாக்டீரியா இலைக்கருகல் நோய் ஆகியவை தாக்கி மகசூல் இழப்பை ஏற்படுத்துகின்றன. இவற்றைத் தடுப்பதற்கு நெல் விதைகளை உப்புக்கரைசலில் மூழ்க வைத்து, திரட்சியான நெல் விதைகளை பிரித்தெடுக்க வேண்டும். இவ்வாறு தரம் உயர்த்தப்பட்ட விதைகளை விதை நேர்த்தி செய்ய வேண்டும்.
ஒரு கிலோ நெல் விதைக்கு கார்பன்டாசிம் (பாவிஸ்டின்) 2 கிராம் மருந்து மற்றும் ஒரு லிட்டர் தண்ணீர் என்ற அளவில் கலந்து, 10 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். அதன்பின், தண்ணீரை வடித்து விட்டு, 24 மணி நேரத்திற்கு வைத்து முளைகட்டிய பிறகு விதைக்கலாம்.
பி பீ டி 5204 (டீலக்ஸ் பொன்னி) போன்ற குலைநோய் தாக்குதலுக்கு அதிகமாக உள்ளாகும் ரகங்களின் விதைகளை டிரைசைக்ளசோல் என்னும் பூஞ்சானக்கொல்லி மருந்தை, ஒரு கிலோ நெல் விதைக்கு 2 கிராம் மருந்து மற்றும் ஒரு லிட்டர் தண்ணீர் என்ற அளவில் கலந்து 10 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
தண்ணீரை வடித்து விட்டு 24 மணி நேரத்திற்கு வைத்து முளைகட்டிய பிறகு எடுத்து விதைக்கலாம். மேலும், சூடோமோனாஸ் என்ற உயிரியல் பூஞ்சான கொல்லியை ஒரு கிலோ நெல் விதைக்கு 10 கிராம் மற்றும் ஒரு லிட்டர் தண்ணீர் என்ற அளவில் கலந்து ஊற வைத்து, வடிகட்டி விதைக்கலாம்.
விதைநேர்த்தி செய்வதால் நெல்லின் முளைப்புத்திறன் அதிகரிப்பதோடு, விதை மூலம் பரவும் நோய்கள் கட்டுப்படுத்தப்படுகிறது. மகசூலும் அதிகரிக்கிறது என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago