ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, விழுப்புரத்தில் அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தனியாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் விழுப்புரத்தில் ஜெயலலிதா பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது. அதற்கு துணைவேந்தர் நியமனமும் நடைபெற்றது. ஆனால் அதற்கான நிதி ஒதுக்கீடு, கட்டுமானம் உள்ளிட்ட பணிகள் நடைபெறவில்லை எனக்கூறி, திமுக ஆட்சிப் பொறுப்பேற்றதும் ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைக்க முடிவு செய்தது.
இதை கண்டித்து முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். அவரது தலைமையில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டஅதிமுக சார்பில் விழுப்புரத்தில் சில நாட்களுக்கு முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்நிலையில் நேற்று காலை தமிழ்நாடு சட்டப்பேரவை கூடியதும், 2021-ம் ஆண்டு தமிழ்நாடு பல்கலைக்கழகங்கள் சட்டத்தை (திருத்தம் மற்றும் நீக்கம்) உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிமுகம் செய்தார். இதில், ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைக்கும் மசோதா அறிமுகம் செய்யப்பட்டது.
இதையடுத்து முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் நேற்று காலை விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் அருகே தன்னந்தனியே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். விழுப்புரம் மேற்கு போலீஸார் அவரை கைது செய்து, தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர். தகவலறிந்த அதிமுகவினர் காந்தி சிலை அருகே திரண்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை விழுப்புரம் நகர போலீஸார் கைது செய்து அதே தனியார் மண்டபத்தின் நுழைவாயிலில் அமர வைத்தனர்.
இதைத்தொடர்ந்து விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அதிமுகவினர் சுமார் 50 இடங்களில் ஆங்காங்கே மறியல் போராட்டங்களில் ஈடுபட்டு கைதாயினர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago