சளி, காய்ச்சல் போன்ற சிறு அறிகுறிகள் தென்பட்டாலும் - மாணவர்களை தனிமைப்படுத்த அறை ஒதுக்க வேண்டும் : கல்வி நிறுவன நிர்வாகிகளுக்கு ஆட்சியர் அறிவுறுத்தல்

By செய்திப்பிரிவு

சளி, காய்ச்சல், இருமல் போன்ற சிறு அறிகுறிகள் தென்பட்டாலும், மாணவர்களை தனிமைப்படுத்துவதற்காக ஒவ்வொரு பள்ளி மற்றும் கல்லூரியிலும் தனி அறை ஒதுக்க வேண்டும், என நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் தெரிவித்துள்ளார்.

கல்லூரிகள் மற்றும் பள்ளிகள் இன்று திறக்கப்படுவதையொட்டி நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் பள்ளி, கல்லூரி நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் தலைமை வகித்துப் பேசியதாவது:

கல்லூரிகள் மற்றும் பள்ளிகளில் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும். அனைத்து ஆசிரியர்கள், பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் கட்டாயம் கரோனா தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும். இதுபோல் 18 வயது நிரம்பிய மாணவ, மாணவியர் அனைவரும் கண்டிப்பாக கரோனா தடுப்பூசி செலுத்திய சான்றிதழை காண்பிக்க வேண்டும். அவ்வாறு செலுத்தாதவர்கள் அதற்கான உரிய சான்றிதழை சமர்பிக்க வேண்டும். பள்ளி, கல்லூரி வளாகத்தில் உள்ள அனைத்து நுழைவாயில்களிலும் கைகளை சுத்தம் செய்வதற்காக கிருமி நாசினி, தண்ணீர் மற்றும் சோப்பு கட்டாயம் வைத்திருக்க வேண்டும். உடல் வெப்ப நிலையை பரிசோதித்த பின்னரே வளாகத்திற்குள் அனுமதிக்க வேண்டும்.

மேலும், அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். மாணவ, மாணவியர்களை பார்க்க வரும் பெற்றோர்களும் கட்டாயம் தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழை வைத்திருத்தல் வேண்டும். சான்றிதழ் உள்ளவர்கள் மட்டுமே பள்ளிக்குள் அனுமதிக்க வேண்டும்.

யாருக்கேனும் சளி, காய்ச்சல், இருமல் போன்ற சிறு அறிகுறிகள் தென்பட்டாலும் அவர்களை தனிமைப்படுத்துவதற்காக ஒவ்வொரு பள்ளி மற்றும் கல்லூரியிலும் தனி அறை ஒதுக்கப்பட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் துர்காமூர்த்தி, கோட்டாட்சியர்கள் மு.கோட்டைக்குமார், தே.இளவரசி, சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் பிரபாகரன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அ. பாலுமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்