பவானிசாகர் அணையில் இருந்து, இரண்டாவது நாளாக உபரி நீர் வெளியேற்றப்படும் நிலையில், கொடிவேரி தடுப்பணையில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்ட மக்களின் நீராதாரமாக விளங்கும் பவானிசாகர் அணையில் 105 அடிவரை நீரினைத் தேக்கி வைக்க முடியும். அணையின் பாதுகாப்பு விதிமுறைகளின்படி எந்தெந்த மாதங்களில் எவ்வளவு அடி நீரினைத் தேக்கலாம் என்ற விதிமுறை வகுக்கப்பட்டுள்ளது. இதன்படி, இம்மாதம் 30-ம் தேதி வரை அணையில் 102 அடி வரை மட்டுமே நீரினைத் தேக்கி வைக்க முடியும்.
பவானிசாகர் அணை நீர்மட்டம் ஜூலை மாதம் 25-ம் தேதியன்று 100 அடியை எட்டியது. நீர்வரத்து குறைவு, பாசனத்துக்கு நீர் திறப்பு காரணமாக, அணையின் நீர்மட்டம் மெதுவாகவே உயர்ந்தது. கோவை, நீலகிரி மாவட்டத்தில் பெய்த கனமழையால் 30-ம் தேதி மாலை அணையின் நீர்மட்டம் 102 அடியை எட்டியது.
அணை விதிமுறைகளின்படி செப்டம்பர் 30-ம் தேதி வரை 102 அடிவரை மட்டுமே நீரினைத் தேக்கி வைக்க முடியும் என்பதால், நேற்று முன்தினம் முதல் பவானி ஆற்றில் உபரி நீர் வெளியேற்றப்படுகிறது.
இதனால், பவானி ஆற்றின் கரையோரப் பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நீர் வரத்து அதிகரிப்பால் கொடிவேரி அணையில் சுற்றுலா பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பவானி ஆற்றில் யாரும் குளிக்கவோ, துணி துவைக்கவோ, கால்நடைகளை குளிப்பாட்டவோ கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நேற்று மாலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 102 அடியாக இருந்தது. அணையின் நீர் இருப்பு 30.31 டிஎம்சியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 2867 கனஅடி நீர் வரத்து இருந்த நிலையில், அணையில் இருந்து பவானி ஆற்றில் உபரிநீர் விநாடிக்கு 2280 கனஅடியும், காலிங்கராயன் பாசனத்துக்கு 500 கனஅடியும் நீர் வெளியேற்றப்படுகிறது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago