தூத்துக்குடி வஉசி துறைமுக பொறுப்புக் கழக தலைவர் தா.கி.ராமச்சந்திரன் அறிக்கை: சிங்கப்பூர் நாட்டு கொடியுடன் எம்.வி. இன்ஸ் அங்காரா என்ற கப்பல் வளைகுடா நாட்டில் உள்ள மினாசர்க் துறைமுகத்தில் இருந்து பொது சரக்குகளுடன் தூத்துக்குடி வஉசி துறைமுகத்தின் 9-வது தளத்துக்கு கடந்த 26-ம் தேதி வந்தது. இந்த கப்பல் செட்டிநாடு சிமெண்ட் நிறுவனத்துக்காக 93,719 டன் சுண்ணாம்புக்கல் ஏற்றிவந்தது.
துறைமுகத்தில் நாளொன்றுக்கு 50 ஆயிரம் டன் சரக்குகளை கையாளும் திறன் கொண்ட 3 நகரும் பளுதூக்கிகள் மூலம் இந்த கப்பலில் இருந்த மொத்த சரக்குகளும் 29-ம் தேதி முழுமையாக கையாளப்பட்டது. இதற்கு முன்பு கடந்த மே மாதம் 14-ம் தேதி எம்.வி. பேஸ்டியன்ஸ் என்ற கப்பலின் மூலம் வந்த 92,935 டன் நிலக்கரி கையாளப்பட்டதே சாதனையாக இருந்தது. அந்த சாதனை தற்போது முறியடிக்கப்பட்டுள்ளது.
வஉசி துறைமுகம் நிகழ் நிதியாண்டில் ஜூலை மாதம் வரை 11.33 மில்லியன் டன் சரக்குகளை கையாண்டு, கடந்த நிதியாண்டு ஜூலை வரை கையாண்ட அளவான10.58 மில்லியன் டன் சரக்குகளைவிட 7.14 சதவீதம் வளர்ச்சிகண்டுள்ளது. சரக்கு பெட்டகங்களை பொறுத்தவரையில் நிகழ் நிதியாண்டு ஜூலை மாதம் வரை 2.69 லட்சம் சரக்கு பெட்டகங்களை கையாண்டு, கடந்த நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் 21.07 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago