திருப்பத்தூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி பதவிகளுக்காக நடை பெற உள்ள தேர்தலை முன்னிட்டு புகைப்படத்துடன் கூடிய இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா நேற்று வெளியிட்டார்.
தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கான தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன. அதன்படி, ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கான தேர்தல் நடைபெறும் மாவட்டங் களில் வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு பொதுமக்கள் பார்வைக்காக அரசு அலுவலகங் களில் வைக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 2021-ம் ஆண்டு நடைபெற உள்ள ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கான தேர்தலை முன்னிட்டு வார்டு வாரியான புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் இறுதி பட்டியல் அனைத்து அரசியல் கட்சியினர் முன்னிலையில் நேற்று வெளி யிடப்பட்டது.
வாக்காளர் பட்டியல் மாவட்ட ஊராட்சி அலுவலகம், உதவி இயக்குநர் ஊராட்சி அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், கிராம ஊராட்சி அலுவலகங்களில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்படும் என ஆட்சியர் அமர் குஷ்வாஹா தெரவித்தார்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் 208 கிராம ஊராட்சிகள் உள்ளன. இதில், 1,579 வார்டுகள் உள்ளன. அதேபோல, திருப்பத்தூர், கந்திலி, நாட்றாம்பள்ளி, ஜோலார்பேட்டை, ஆலங்காயம், மாதனூர் என மொத்தம் 6 ஒன்றியங்கள் உள்ளன. இந்த 6 ஒன்றியங்களுக்கு 125 ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கும், 13 மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் பதவிக்கும், 208 கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கும், 1,579 கிராம ஊராட்சி வார்டு கவுன்சிலர் பதவி என மொத்தம் 1,925 பதவிகளுக்கு வாக்குச்சீட்டு முறையில் நேரடி தேர்தல் நடைபெற உள்ளது.
இறுதி வாக்காளர் பட்டியல் விவரம்:
ஆலங்காயம் ஒன்றியத்தில் 94,311 வாக்காளர்களும், ஜோலார் பேட்டை ஒன்றியத்தில், 1 லட்சத்து 37 ஆயிரத்து 250 வாக்காளர்களும், கந்திலி ஒன்றியத்தில் 1 லட்சத்து 19 ஆயிரத்து 226 வாக்காளர்களும், மாதனூர் ஒன்றியத்தில் 1 லட்சத்து 22 ஆயிரத்து 505 வாக்காளர்களும், நாட்றாம்பள்ளி ஒன்றியத்தில் 76 ஆயிரத்து 913 வாக்காளர்களும், திருப்பத்தூர் ஒன்றியத்தில் 1 லட்சத்து 13 ஆயிரத்து 903 வாக்காளர்களும் உள்ளனர். உள்ளாட்சி தேர்தலுக்காக மாவட்டம் முழுவதும் 1,164 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன என மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில், திட்ட இயக்குநர் செல்வராசு, ஊராட்சி களின் உதவி இயக்குநர் அருண் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago