கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிராமப்புறங்களில் உள்ள ரேஷன் கடைகளில் மக்கள் கரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றாமல் பொருட்கள் வாங்கிச் செல்கின்றனர். இதனால் நோய் பரவும் அச்சம் ஏற்பட்டுள்ளது.
கடந்த 2019-ம் ஆண்டு மே மாதத்திற்கு பிறகு, படிப்படியாக கரோனா நோய் தொற்று கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பரவ தொடங்கியது. பல்வேறு கட்டுப்பாடுகளால் நோய் தொற்று குறைந்தது. இந்நிலையில் கடந்த மார்ச் 14-ம் தேதி மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 ஆக இருந் தது. ஆனால் மே மாதம் அதிகபட்சம் கரோனாவால் பாதிக்கப்பட்டவர் களின் எண்ணிக்கை 800-யை கடந்தது. மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வரும் தொடர் நடவடிக்கையால் கரோனாவால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறையத் தொடங்கியது. நேற்று முன்தினம் வரை மாவட்டத்தில் கரோனாவால் 329 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது 257 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் கிராமப் புறங்களில் உள்ள ரேஷன்கடைகளில் பொருட்கள் வாங்க வரும் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக் காமலும், முகக் கவசம் அணியாமலும் நிற்கின்றனர். இதனால் மீண்டும் கரோனா பரவல் அதிகரிக்கும் அச்சம் உள்ளதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இதுதொடர்பாக கிருஷ்ண கிரியைச் சேர்ந்த தேசியசீலன் கூறும்போது, ரேஷன் கடைகளில் கரோனா தடுப்பு விதிமுறைகள் பின்பற்றுவது இல்லை. இதனை மாவட்ட நிர்வாகம் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்டத்தில் தினசரி கரோனா பாதிப்பு 30-க்கு கீழ் உள்ள நிலையில், விதிமுறைகளை மீறுவதால் மீண்டும் அதிகரிக்கும் அபாய நிலை ஏற்படும்.
ரேஷன் கடை பணியாளர்களும் பொருட்களை வாங்குபவர்களும் கட்டாயம் முகக்கவசம், சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்பதை வலியுறுத்த வேண்டும். இதனை மாவட்ட, வட்ட வழங்கல் அலுவலர்கள் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago