தஞ்சாவூர், நாகை, திருவாரூர், அரியலூர், கரூர், திருச்சி மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் நேற்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாற்றுத் திறனாளிகளுக்கு திமுக தேர்தல் அறிக்கையில் அறிவித்தபடி மாத உதவித் தொகையை ரூ.1500 என உயர்த்தி வழங்க வேண்டும். செப்.9-ம் தேதி மானிய கோரிக்கையில் இந்த அறிவிப்பு இடம்பெற வேண்டும். கல்வி வேலைவாய்ப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தஞ்சாவூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, தஞ்சாவூர் மாநகரச் செயலாளர் சி.ராஜன், ஒன்றியச் செயலாளர் பி.சங்கிலிமுத்து ஆகியோர் தலைமை வகித்தனர்.
சங்கத்தின் மாவட்டச் செயலாளர் பி.எம்.இளங்கோவன், மாவட்ட பொருளாளர் எஸ்.சிவப்பிரியா, மாவட்ட துணைச் செயலாளர் பி.கிறிஸ்டி உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர். இதேபோல, கும்பகோணம், பட்டுக்கோட்டை உள்ளிட்ட இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருவாரூர் மாவட்டத்தில்...
திருவாரூர் மாவட்டத்தில் 11 இடங்களில் கிராம நிர்வாக அலுவலகங்கள் முன்பு அனைத்து மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.குடவாசல் ஒன்றியம் சரபோஜிராஜபுரம் கிராம நிர்வாக அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் சந்திரா தலைமை வகித்தார்.
திருச்சி மாவட்டத்தில்...
திருச்சி மாவட்டம் திருவெறும்பூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தின் மாவட்டத் தலைவர் குமார், தாத்தையங்கார்பேட்டையில் மாவட்டப் பொருளாளர் சுப்பிரமணியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதுதவிர, துவரங்குறிச்சி, ஜீயபுரம் உட்பட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இதேபோல, நாகை மாவட்டம் திருமருகல் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன், தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, மாற்றுத் திறனாளிகள் சங்க ஒன்றியச் செயலாளர் ராமச்சந்திரன் தலைமை வகித்தார். சங்க மாவட்டக் குழு உறுப்பினர் லெனின், ஒன்றியக் குழு உறுப்பினர்கள் சுப்பிரமணியன், தவமணி, பாலு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அரியலூர் மாவட்டம் திருமானூர் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சங்கத்தின் மாவட்டத் தலைவர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார். மணிமன்னன், பாஸ்கர், நிர்மலா, தர்மராஜ், பிரியா உட்பட பலர் கலந்துகொண்டனர்.
தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் கரூர் மாவட்டக் குழு உறுப்பினர் கே.வீராச்சாமி தலைமையில் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் கே.வி.கணேசன், கட்டுமான தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் சி.ஆர்.ராஜாமுகமது, ஒன்றிய துணைச் செயலாளர் ஜி.தங்கப்பாண்டியன், மாரிமுத்து, பொன்னுச்சாமி, பிரான்சிஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago