அதிமுகவில் இருந்து திமுகவில் இணைந்த புதுக்கோட்டை மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவரை மாற்ற வேண்டும் என திமுக உறுப்பினர்கள் போர்க்கொடி தூக்கி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் மொத்தம் உள்ள 22 மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர்களில் 13 இடங்களை திமுக கூட்டணியும், 9 இடங்களை அதிமுக கூட்டணியும் கைப்பற்றின. ஆனால், அப்போது அமைச்சராக இருந்த சி.விஜயபாஸ்கர் ஆதரவுடன் மாவட்ட ஊராட்சித் தலைவராக அதிமுக உறுப்பினர் ஜெயலட்சுமியும், துணைதலைவராக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த உமா மகேஸ்வரியும் தேர்வு செய்யப்பட்டனர்.
இந்நிலையில், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் ஜெயலட்சுமி, அதிமுகவில் இருந்து விலகி முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அண்மையில் திமுகவில் இணைந்தார். அதன்பிறகு, புதுக்கோட்டை மாவட்ட ஊராட்சிக் குழுக் கூட்டம் நேற்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. கூட்ட அரங்குக்கு அதிமுக உறுப்பினர்கள் மட்டும் வந்திருந்த நிலையில், பெரும்பான்மையாக உறுப்பினர்கள் வராததால் கூட்டம் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, தலைவர் ஜெயலட்சுமி பதவி விலகவேண்டும் என அதிமுக உறுப்பினர்கள் கோஷம் எழுப்பிவிட்டு கலைந்து சென்றனர்.
இதற்கிடையில், தலைவரை மாற்றினால்தான் கூட்டத்தில் பங்கேற்போம் எனக் கூறி திமுக உறுப்பினர்கள் நேற்றைய கூட்டத்தை புறக்கணித்ததாக அக்கட்சியினர் தெரிவித்தனர். இது குறித்து திமுக உறுப்பினர்கள் கூறியபோது, ‘‘ஜெயலட்சுமி திமுகவுக்கு வந்ததை வரவேற்கிறோம். அதேசமயம், அவர் தலைவராக தொடர்வதை ஏற்க முடியாது. திமுக உறுப்பினர்களில் ஒருவரை தலைவராக தேர்வு செய்ய வேண்டும்.
அதுவரை கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம். இது தொடர்பாக, மாவட்ட அமைச்சர்கள் சென்னையில் இருந்து வந்த பிறகு, கட்சியின் நிர்வாகிகளுடன் பேசி முடிவெடுக்கப்படும்’’ என்றனர்.
மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவருக்கு எதிராக அதிமுக, திமுகவினர் போர்க்கொடி உயர்த்தியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago