தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம்குறித்த விசாரணை வரும் பிப்ரவரி மாதத்துக்குள் முடிவடையும் என ஒருநபர் ஆணையத்தின் வழக்கறிஞர் தெரிவித்தார்.
தூத்துக்குடியில் கடந்த 2018-ம்ஆண்டு மே மாதம் 22-ம் தேதி நடைபெற்ற துப்பாக்கி சூடு, தடியடிமற்றும் தொடர்ந்து நடந்த சம்பவங்களில் 13 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக தமிழக அரசால் அமைக்கப்பட்ட உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒருநபர் ஆணையம் விசாரணை மேற்கொண்டு வருகிறது.
இதுவரை 28 கட்ட விசாரணை முடிந்த நிலையில், 29-வது கட்ட விசாரணை தூத்துக்குடி கடற்கரை சாலை விருந்தினர் மாளிகையில் உள்ள முகாம் அலுவலகத்தில் கடந்த 23-ம் தேதி தொடங்கியது.
நேற்று வரை 5 நாட்கள் நடைபெற்ற விசாரணையில் ஆஜராகிசாட்சியம் அளிக்க போராட்டத்தின் போது காயம் அடைந்த போலீஸார், சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மற்றும் வழக்கறிஞர் ஹென்றி டிபேன் உள்ளிட்ட 58 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. இதில் 51 பேர் ஆஜராகி சாட்சியம் அளித்தனர்.
இது குறித்து ஆணையத்தின் வழக்கறிஞர் அருள்வடிவேல் சேகர்செய்தியாளர்களிடம் கூறியதாவது:
இதுவரை 863 பேர் விசாரிக்கப்பட்டுள்ளனர். 1,140 ஆவணங்கள் குறியீடு செய்யப்பட்டுள்ளன.
அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்துக்குள் அனைத்து சாட்சிகளிடமும் விசாரணை நடத்தி முடிக்கப்படும் என நம்புகிறோம். நடிகர் ரஜினிகாந்த் கடந்தமுறை ஆணையத்தில் அளித்த விளக்கத்தில் துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக அவர் சொன்ன கருத்துகள் அனைத்தும் நேரடியான தகவல்கள் வாயிலாக பெறப்பட்டவை அல்ல என்றும் இரண்டாம்தர தகவல்கள் மூலம் பெறப்பட்டவை என்றும் தெளிவாக குறிப்பிட்டுள்ளார். எனவே, அவரிடம் மீண்டும் விசாரணை நடத்துவது பற்றி ஆணையம் பரிசீலித்து முடிவெடுக்கும்.
அடுத்தகட்ட விசாரணை செப்டம்பர் 13- ம் தேதி முதல் 10 நாட்கள் நடைபெறும். இதில் துப்பாக்கியால் சுட்டவர்கள், ஸ்டெர்லைட் ஆலை குடியிருப்பில் குடியிருந்தவர்கள் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்படும். அப்போதைய மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் ஆகியோ ரிடம் கடைசியாக விசாரணை நடத்தப்படும் என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago