திருச்செந்தூர் கோயிலில் பக்தர்கள் பங்கேற்பின்றி - ஆவணித் திருவிழா கொடியேற்றம் : உள்பிரகாரத்தில் சிவப்பு சார்த்தி, பச்சை சார்த்தி உலா

By செய்திப்பிரிவு

திருச்செந்தூர் செந்திலாண்டவர் கோயிலில் ஆவணித் திருவிழா கொடியேற்றம் பக்தர்கள் பங்கேற்பின்றி நேற்று நடைபெற்றது.

இக்கோயிலில் நடைபெறும் முக்கிய விழாக்களில் ஒன்றான ஆவணித் திருவிழா நேற்று தொடங்கியது. இதனை முன்னிட்டு அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு சுவாமிக்கு விஸ்வரூப தீபாராதனை, 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது.

பின்னர் கொடிபட்டம் கோயில் பிரகாரத்தில் உலா வந்தது. தொடர்ந்து கொடிப்பட்டத்துக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, இரண்டாம் பிரகாரத்தில் உள்ள செப்புக் கொடி மரத்தில் அதிகாலை 5.40 மணிக்கு மேளதாளங்கள் முழங்க காப்பு கட்டிய ஆனந்த விஸ்வநாத சிவாச்சாரியார் கொடி யேற்றினார்.

தொடர்ந்து கொடிமர பீடத்துக்கு எண்ணெய், பால், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட திரவியங்கள் மற்றும் பூஜையில் வைக்கப்பட்ட கும்ப கலசத்தில் உள்ள புனித நீரால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் கொடிமரம் தர்ப்பை புல், வண்ண மலர்கள், பட்டாடை அணிவித்து அலங்கரிக்கப்பட்டது. தொடர்ந்து காலை 6.50 மணிக்குசோடஷ தீபாராதனை நடைபெற்றது.

நிகழ்ச்சியில் திருவாவடுதுறை ஆதீனம் ல அம்பலவாண தம்பிரான் சுவாமிகள், மண்டகப்படி உபயதாரர் ஏரல் சேர்மன் கோயில் பரம்பரை அக்தார் கருத்தபாண்டி, கோயில் தக்கார் பிரதிநிதி பாலசுப்பிரமணியன், கோயில் உதவி ஆணையர் செல்வராஜ் உள்ளிட்ட அலுவலர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கரோனா தடுப்பு நடவடிக்கையாக கொடியேற்ற நிகழ்ச்சி மற்றும் கோயில் வளாகத்தில் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. இதனால் கோயில் வளாகம், கடற்கரை உள்ளிட்ட பகுதிகள் வெறிச்சோடி காணப்பட்டன.

ஆவணித்திருவிழா வரும் செப்டம்பர் 7-ம் தேதி தேதி வரை 12 நாட்கள் நடைபெறும் நலையில், 10-ம் திருவிழாவான செப்டம்பர் 5-ம் தேதி வரை 10 நாட்கள் கோயிலில் பக்தர்கள் தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. விழா நாட்களில் சுவாமி, அம்மன் எழுந்தருளல், சிவப்பு சார்த்தி, பச்சை சார்த்தி உலா உள்ளிட்ட அனைத்து நிகழ்வுகளும் கோயில் உள்பிரகாரத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளை பக்தர்கள் காணும் வகையில் இணையதளம் மூலம் ஒளிபரப்பு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்