தி.மலை மாவட்டம் தண்டராம் பட்டு அடுத்த பேராயம்பட்டு கிராமத்தில் வசிப்பவர் விவசாயி பச்சையப்பன்(61). இவருக்கு சொந்தமாக 3 ஏக்கர் விவசாய நிலம், பேராயம்பட்டு அடுத்த அத்திப்பாடி கிராமத்தில் உள்ளது. விவசாய நிலத்தில் இரவு காவல் பணிக்கு பச்சையப்பன் தினசரி சென்று வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று முன் தினம் இரவு, வழக்கமான காவல் பணிக்கு அவர் சென்றுள்ளார். விவசாய நிலத்தில் உள்ள கொட்டகையில் பச்சையப்பன் படுத்து உறங்கி உள்ளார். அப்போது அதிகாலை நேரத்தில், அங்கு வந்த 3 பேர் கும்பலில் ஒருவர், தன்னிடம் இருந்த நாட்டுத் துப்பாக்கி மூலம் விவசாயி பச்சையப்பனை சுட்டுள்ளார். பின்னர், அக்கும்பல் தப்பித்து சென்றுவிட்டது. துப்பாக்கிச் சூட்டில், அவரது வலது தோள் பகுதியின் நடுவே குண்டு பாய்ந்து மயங்கினார்.
அப்போது அவ் வழியாக சென்றவர்கள், மயங்கி கிடந்தபச்சையப்பனை மீட்டு தி.மலைஅரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர், மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத் துவமனையில் பச்சையப்பன் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். இதைத்தொடர்ந்து உயர் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். இது குறித்து வாணாபுரம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து பேராயம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த சுப்ரமணி(54), அன்பழகன்(50), அவரது மனைவி ஜெயந்தி(40) ஆகிய 3 பேரை கைது செய்தனர். நிலத்தகராறு காரணமாக பச்சையப்பனை சுப்ரமணி துப்பாக்கியால் சுட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago