கரோனா பெருந்தொற்று காரணமாக இரண்டாம் ஆண்டாக விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட முடியாத நிலை நிலவுகிறது. இந்நிலையில், இதன் விற்பனையை குறிவைத்து தயாரிக்கப்பட்ட விநாயகர் சிலைகள் விற்பனையில்லாத நிலையில், வருவாயின்றி மண்பாண்ட கலைஞர்கள் வேதனை அடைந்துள்ளனர்.
கரோனா பரவல் காரணமாக கடந்தாண்டு விநாயகர் சதுர்த்தி விழா வழக்கமான உற்சாகமின்றி பல்வேறு கட்டுப்பாடுகளுடன் கொண்டாடப்பட்டது. தற்போது, கரோனா இரண்டாம் அலையை தொடர்ந்து அக்டோபரில் மூன்றாம் அலையின் வேகம் இருக்கும் என மருத்துவத் துறையினர் எச்சரித்து வருகின்றனர்.
இந்நிலையில், செப்டம்பர் 10-ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா வருகிறது. கரோனா ஊரடங்கில் செப்டம்பர் 6-ம் தேதி வரையில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டபோதும், கோயில்கள், மசூதிகள், ஆலயங்கள் உள்ளிட்ட வழிபாட்டு தலங்களில் வெள்ளி, சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் பக்தர்களுக்கு அனுமதியில்லை.
இதனால், இந்தாண்டும் விநாயகர் சதுர்த்தி விழா கடந்த காலங்களைபோல உற்சாகத்துடன் கொண்டாட முடியுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்நிலையில், விநாயகர் சதுர்த்தி விற்பனையை எதிர்பார்த்து மண்பாண்ட கலைஞர்கள் தயார் செய்த விநாயகர் சிலைகள் விற்பனையில் சரிவடைந்திருப்பதால், மண்பாண்ட கலைஞர்கள் வருவாயின்றி வேதனை அடைந்துள்ளனர்.
உள்ளூர் மண்பாண்ட தொழிலாளர்கள் விநாயகர் சிலைகள் விற்காமல் தவித்து வரும் நிலையில், வடமாநில தொழிலாளர்கள் பலர் பை-பாஸ் சாலையோரங்களில் சிறிய விநாயகர் சிலைகளை தயாரித்து வருகின்றனர். இருந்தபோது, எதிர்பார்த்த அளவில் விற்பனையாகாததால், இத்தொழிலில் உள்ள வடமாநில தொழிலாளர்களும் வேதனையில் உள்ளனர்.
இதுதொடர்பாக மண்பாண்ட கலைஞர்கள் கூறியதாவது:
இரு ஆண்டாக மண்பாண்ட தொழிலாளர்கள் விநாயகர் சதுர்த்தி விழாவுக்காக தயாரித்த சிலைகள் விற்பனையாகாமல் பெரும் நஷ்டத்துக்கு உள்ளாகியுள்ளனர். மேலும், பொங்கல் பண்டிகையும் பொதுமக்கள் சிறப்பாக கொண்டாடாத நிலையில், பானை, அடுப்பு உள்ளிட்டவற்றின் வியாபாரமும் எதிர்பார்த்த அளவில் நடக்கவில்லை.
விநாயகர் சிலைகள் அரசு வழிகாட்டுதலின்படி களிமண்ணால் செய்யப்பட்டும், ரசாயன கலவை அற்ற கிழங்கு மாவால் தயார் செய்து வருகிறோம்.
சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப்பொருட்களால் சிலைகள் தயார் செய்வதால் மூலப்பொருட்களின் விலை அதிகம் உள்ளதால், தயாரிப்பு செலவும் அதிகரித்துள்ளது. இந்நிலையில், எதிர்பார்த்த விற்பனை நடைபெறாததால், வருவாயின்றி பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகிறோம். எனவே, தமிழக அரசு எங்களை காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago