கந்திலி காவல் நிலையத்துக்கு விசாரணைக்கு சென்ற பெண் பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றார். இந்நிலையில், காவல் நிலையத்தில் துன்புறுத்திய காவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என எஸ்பி அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது.
திருப்பத்தூர் அடுத்த பெரியகண்ணாளப்பட்டி கிராமம் பூசாரி வட்டத்தைச் சேர்ந்தவர் சங்கர்(33). இவரது சகோதரி சோனியாகாந்தி(30). இவரும், அதேபகுதியைச் சேர்ந்த சிலரும் சேர்ந்து ஏலச்சீட்டு நடத்தி வந்துள்ளனர். 26 பேர் கொண்ட இந்த ஏலச்சீட்டில் 22 பேர் சீட்டு கட்டி பணத்தை எடுத்துள்ளனர்.
இந்நிலையில், கரோனா ஊரடங்கு காரணமாக தொடர்ந்து ஏலச்சீட்டை சோனியாகாந்தியால் நடத்த முடியவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால், 4 பேருக்கு சீட்டுப்பணத்தை திருப்பித் தருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், அதேபகுதியைச் சேர்ந்த கோவிந்தராஜ் என்பவருக்கு சீட்டுகட்டிய பணத்தை திருப்பித் தருமாறு சசிகுமார் என்பவர் சோனியாகாந்தியை வற்புறுத்தியுள்ளார்.
ஆனால், சீட்டு எடுத்தவர்கள் பணம் தரவில்லை, அவர்கள் கொடுத்த உடன் பணத்தை வாங்கி தருவதாக சோனியாகாந்தி கூறியிருக்கிறார். இது தொடர்பாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதை யடுத்து, சீட்டுப்பண மோசடி செய்து விட்டதாக கந்திலி காவல் நிலையத்தில் சசிகுமார் கடந்த 2 நாட்களுக்கு முன்பு புகார் அளித்துள்ளார். அதன்பேரில், கந்திலி காவல் துறையினர் கடந்த 23-ம் தேதி சோனியாகாந்தியை காவல் நிலையத்துக்கு நேரில் வருமாறு அழைத்து விசாரித்துள்ளனர். அப்போது, சசிகுமாரும் உடன் சென்றுள்ளார்.
விசாரணையின் போது சோனியாகாந்தி மயங்கி விழுந்துள்ளார். உடனே, அவர் திருப்பத்தூர் அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதனை செய்த போது அவர் பூச்சி மருந்து குடித்தது தெரியவந்தது.
தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், காவல் நிலையத்தில் சீட்டு பணம் மோசடி குறித்து விசாரணை செய்வதற்காக அழைத்துச்சென்ற கந்திலி காவல் துறையினர் தன்னை அடித்து துன்புறுத்தியதால் தான் சோனியாகாந்தி காவல் நிலையத்திலேயே பூச்சி மருந்து குடித்து மயங்கியதாகவும், உயிருக்கு போராடிய அவரை காப்பாற்றக்கூட காவல் துறையினர் முன்வரவில்லை.
எனவே, இது தொடர்பாக கந்திலி காவல் ஆய்வாளர் மணிமாறன் உட்பட அங்கு பணியில் இருந்த காவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என தற்கொலைக்கு முயன்ற சோனியகாந்தி சார்பில் அவரது சகோதரர் சங்கர் நேற்று எஸ்.பி., அலுவலகத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago