125 நாட்களுக்குப் பின்னர் - நீலகிரியில் சுற்றுலா தலங்கள் திறப்பு :

By செய்திப்பிரிவு

நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத் தலங்கள் 125 நாட்களுக்குப் பின்னர் திறக்கப்பட்டன.

கரோனா அச்சுறுத்தலால் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 20-ம் தேதிமுதல் தமிழகத்தில் உள்ள பூங்காக்கள் மற்றும் சுற்றுலாத் தலங்கள் மூடப்பட்டன. தற்போது கரோனா தொற்று குறைந்து வருவதை அடுத்து, நேற்றுமுதல் தமிழகத்தில் உள்ள சுற்றுலாத் தலங்கள், பூங்காக்களைத் திறக்க அரசு அனுமதியளித்தது.

நீலகிரி மாவட்டத்தில், தோட்டக் கலைத் துறைக்கு சொந்தமான உதகை தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, தேயிலைப் பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா மற்றும் காட்டேரி பூங்கா, கோத்தகிரி நேரு பூங்கா, சுற்றுலா வளர்ச்சிக் கழகத்துக்கு சொந்தமான படகு இல்லம், பைக்காரா படகு இல்லம் ஆகியவை நேற்று திறக்கப்பட்டன. கிருமிநாசினி கொண்டு கைகளை சுத்தப்படுத்திய பின்பு, தெர்மல் ஸ்கேனர் கொண்டு வெப்பநிலை சரிபார்க்கப்பட்ட பின்பே சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்பட்டனர். உதகை தாவரவியல் பூங்கா ஊழியர்கள் பூக்கள் கொடுத்து, சுற்றுலாப் பயணிகளை வரவேற்றனர்.

பட்டாசு வெடித்தும், சுற்றுலாப் பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கியும் வியாபாரிகள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

நீலகிரி மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா கூறும்போது, ‘‘வனத் துறைக்கு சொந்தமான சூழல் சுற்றுலாப் பகுதிகளான முதுமலை புலிகள் காப்பகம், தொட்டபெட்டா சிகரம் ஆகியவை திறக்கப்படவில்லை. கர்நாடக மாநிலத்துக்கான பேருந்து சேவை தொடங்கியுள்ளது. கேரள மாநிலத்துக்கு பேருந்து சேவை தொடங்கப்படவில்லை. வெளிமாநிலங்களில் இருந்து வருபவர்கள் கரோனா இல்லை என்ற சான்றிதழ் கட்டாயம் வைத்திருக்க வேண்டும்” என்றார்.

வஉசி உயிரியல் பூங்கா

கரோனா தொற்று பரவல் காரணமாக கடந்தாண்டு மார்ச் 17-ம் தேதி கோவை வஉசி உயிரியல் பூங்கா மூடப்பட்டது. ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு வ.உ.சி.உயிரியல் பூங்கா நேற்றுகாலை திறக்கப்பட்டது. குழந்தைகள், பெண்கள், பெரியவர்கள் ஆர்வத்துடன் வந்து பூங்காவை சுற்றிப்பார்த்தனர்.

உயிரியல் பூங்கா இயக்குநர் மருத்துவர் செந்தில்நாதன் கூறும்போது, “சனி, ஞாயிற்றுக்கிழமை தவிர வார நாட்களில் மக்கள் கூட்டம் குறைவாகவே இருக்கும். ஆனால் நீண்ட நாட்களுக்கு பிறகு பூங்கா திறக்கப்பட்டதால், வாரத்தின் முதல் வேலை நாளான திங்கள்கிழமை பொதுமக்கள் வருகை அதிகளவில் இருந்தது.

பூங்காவுக்கு வரும் பொதுமக்கள் கட்டாயம் கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும். கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும். வெளியில் இருந்து கொண்டு வரும் உணவுப் பொருட்களை பூங்காவில் உள்ள உயிரினங்களுக்கு அளிக்க கூடாது. அவ்வாறு செய்தால் அபராதம் விதிக்கப்படும். இதனைக் கண்காணிக்க பூங்கா பணியாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்