மதுரையைச் சேர்ந்த காந்தியவாதி தம்பதி கருப்பையா-சித்ரா. இவர்கள் அகில இந்திய காந்திய இயக்கத்தில் தேசிய ஒருங்கிணைப்பாளர்களாக உள்ளனர். நாட்டின் ஒற்றுமையை வலியுறுத்தி குஜராத், பிஹார், ஒடிசா, காஷ்மீர், பஞ்சாப், வாகா என நாட்டின் பல்வேறு பகுதிகளை கடந்த 31 ஆண்டுகளாக மிதிவண்டி மற்றும் நடைபயணம் மேற்கொண்டுள்ளனர்.
இதுவரை 95 ஆயிரம் கிலோமீட்டர் கடந்துள்ளனர். தற்போது பிரதமர் மோடி அறிவித்த அம்ருத் மகோத்சவம் என்ற தலைப்பில் திருப்பூர் குமரன் பிறந்த ஊரான சென்னிமலையில் இருந்து புதுச்சேரி வரை 400 கிலோ மீட்டர் தொலைவு நடை பயணம் மேற்கொள்கின்றனர்.
சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கு மரியாதை செலுத்தும் வகையில் கடந்த ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர தினத்தன்று நடை பயணத்தை தொடங்கிய தம்பதி செப். 11-ம் தேதி பாரதியார் நினைவு நாள் அன்று புதுச்சேரியில் உள்ள புதுவை தமிழ்ச்சங்கத்தில் நடை பயணத்தை நிறைவு செய்கின்றனர்.
நடை பயணத்தின் ஒரு பகுதியாக நேற்று திருச்செங்கோடு காந்தி ஆசிரமத்திற்கு வந்தனர். அப்போது கருப்பையா கூறுகையில், தேச நலனுக்காக இதுவரை 95,000 கிலோ மீட்டருக்கு மேல் மிதிவண்டி மூலமும், நடைபயணமாகவும் பயணித்துள்ளோம். விரைவில் 1 லட்சம் கிலோ மீட்டரை நெருங்க உள்ளோம்.
தங்களுக்கு அரசு சார்பில் பல்வேறு சலுகைகள், அரசு வேலை, 5 ஏக்கர் நிலம் போன்ற பலவும் வழங்க முன்வந்த போதிலும் காந்திய கொள்கையை மக்களுக்கு சென்று சேர்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் வாழ்நாளை அர்ப்பணித்துள்ளோம். எங்களது சொந்த செலவில் இதனை மேற்கொள்கிறோம். தேச மக்கள் அனைவரும் காந்திய வழியை விரும்பி ஏற்றுக்கொள்வர், என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago