தி.மலை மாவட்டத்தில் வரும் 29-ம் தேதி வரை - பூங்கா, நீச்சல் குளம் மற்றும் அணைகள் திறக்க தடை : ஆட்சியர் பா.முருகேஷ் உத்தரவு

By செய்திப்பிரிவு

தி.மலை மாவட்டத்தில் பூங்காக்கள்,நீச்சல் குளங்கள் மற்றும் அணைகளை திறக்க வரும் 29-ம் தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது என ஆட்சியர் பா.முருகேஷ் தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் கூடுதல் தளர்வுகள் நேற்று அமலுக்கு வந்துள்ளன. அணைகள், பூங்காக்கள், திரையரங்குகள் உள்ளிட்டவை செயல்பட முதல்வர் மு.க.ஸ்டாலின் அனுமதி வழங்கியுள்ளார். இதையடுத்து, திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணையை பார்வையிட மக்களுக்கு நேற்று அனுமதி வழங்கப்பட்டது. இதனால், அணையை மக்கள் பார்வையிட்டனர். மேலும், பூங்காக்களில் சிறுவர்கள் விளையாடி மகிழ்ந்தனர்.

இந்நிலையில், தி.மலை மாவட்டத்தில் உள்ள அனைத்து பொழுதுபோக்கு பூங்காக்கள், நீச்சல் குளங்கள் மற்றும் அணைகள் ஆகியவற்றை வரும் 29-ம் தேதி வரை திறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் பா.முருகேஷ் நேற்று மாலை அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தி.மலை மாவட்டத்தில் கரோனா தொற்று பரவல் குறைந்து வந்தாலும், மாநில சராசரியுடன் ஒப்பிடும்போது சற்று அதிகமாகவே உள்ளது. எனவே, பொழுது போக்கு பூங்காக்கள், நீச்சல் குளங்கள், அணைகள் ஆகியவற்றை வரும் 29-ம் தேதி வரை திறக்க தடை விதிக்கப்படுகிறது” என தெரிவித்துள்ளார்.

கடைகளுக்கு கூடுதல் தளர்வு

இதற்கிடையில், கரோனா தொற்று பரவல் அதிகரித்த காரணத்தால் திருவண்ணாமலை நகரம் மற்றும் காட்டாம்பூண்டி மருத்துவ வட்டாரத்தில் கடந்த 16-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை காலை 6 மணி முதல் மாலை 5 வரை கடைகள் இயங்க அனுமதிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இவற்றிலும் கூடுதல் தளர்வுகள் அளிக்கப்பட் டுள்ளன. இது குறித்து ஆட்சியர் பா.முருகேஷ் நேற்று மாலை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “கடந்த 23-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை இரவு 8 மணி வரை கடைகள் செயல்பட அனுமதிக்கப் படும். உணவகங்கள் மற்றும் தேநீர் கடைகளில் 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் இரவு 8 மணி வரை உணவு உட்கொள்ளலாம். இரவு 8 மணி முதல் 10 மணி வரை பார்சல் சேவைக்கு மட்டும் அனுமதி வழங்கப்படும்” என தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE