திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில் சுங்கச்சாவடி அமைக்க மக்கள் எதிர்ப்பு :

By செய்திப்பிரிவு

கிருஷ்ணகிரி அருகே திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில் சுங்கச்சாவடி அமைக்க மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

கிருஷ்ணகிரி - திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையாக அறிவிக்கப்பட்டு, அந்த சாலையை 4 வழிச்சாலையாக மாற்ற அறிவிப்பு வெளியானது. இதையடுத்த அந்த சாலையினை விரிவாக்கம் செய்ய, சாலையோரங்களில் இருந்த நிலங்களை அரசுடமையாக்கும் பணிகள் தொடங்கின. இருப்பினும் பல்வேறு காரணங்களால் 11 ஆண்டுகளுக்கும் மேலாக சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. நீண்ட இழுபறிக்குப் பிறகு இன்னும் சில மாதங்களில் பணிகள் முடியும் நிலையில், கிருஷ்ணகிரி நகரில் இருந்து 4.3 கி.மீ தூரத்தில் சுங்கச்சாவடி அமைக்க நிலத்தை அலுவலர்கள் தேர்வு செய்து, அளவீடு செய்து வருகின்றனர். இதற்கு கிருஷ்ணகிரி நகர் மற்றும் சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித் துள்ளனர்.

இதுதொடர்பாக அப்பகுதி மக்கள் கூறும்போது, அஞ்சூர் ஊராட்சிக்கு உட்பட்ட பெரியபனமூட்லு பகுதியில் சுங்கச்சாவடிஅமைக்க உள்ளனர். இவ்விடம், கிருஷ்ணகிரி நகராட்சியில் இருந்து 4.3 கி.மீ தூரம் மட்டுமே உள்ளது. இங்கு சுங்கச்சாவடி அமைத்தால், ஜெகதேவி, தொகரப்பள்ளி, ஐகுந்தம், போச்சம்பள்ளி, சந்தூர், மத்தூர், ஊத்தங்கரை, கல்லாவி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மாவட்ட தலைநகரான கிருஷ்ணகிரிக்கு வரும் மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.

இப்பகுதியில் இருந்து வரும் மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு செல்ல வேண்டுமெனில், இச்சாலையில் ஒரு சுங்க கட்டணமும், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச்சாவடியில் ஒரு கட்டணமும் செலுத்த வேண்டிய நிலை ஏற்படும். மேலும், நகராட்சி எல்லை மற்றும் ஒரு சுங்கச்சாவடிக்கு மற்றொரு சுங்கச்சாவடிக்கு இடையே உள்ள தூரம் உள்ளிட்ட விதிமுறைகளை மீறி, இங்கு சுங்கச்சாவடி அமைக்க இடம் தேர்வு செய்துள்ளனர்.

எனவே, பெரியபனமுட்லு பகுதியில் சுங்கச்சாவடி அமைப்பதை தேசிய நெடுஞ்சாலைத்துறை நிர்வாகம் கைவிட வேண்டும். 11 ஆண்டுகளாக சீரற்ற சாலையால் மக்கள் பல்வேறு இன்னல்கள் சந்தித்துள்ளதால் சுங்கச்சாவடி இல்லாத சாலையாக அறிவிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE