செங்கல்பட்டு, மதுரை உட்பட 7 மாவட்டங்களில் - கூட்டுறவுத் துறை மூலம் நெல் கொள்முதல் செய்யக் கூடாது : ஏஐடியுசி தொழிலாளர் சங்கம் வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

தமிழகத்தில் செங்கல்பட்டு, மதுரை உட்பட 7 மாவட்டங்களில் கூட்டுறவுத் துறை மூலம் நெல் கொள்முதல் செய்யும் முடிவை அரசு கைவிட வேண்டும் என தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக ஏஐடியுசி தொழிலாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து அச்சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் சி.சந்திரகுமார், தமிழக முதல்வர் மற்றும் உணவுத் துறை அமைச்சருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பது:

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மூலம் குறைந்தபட்சம் வட்டத்துக்கு ஒரு அமுதம் பல்பொருள் அங்காடி திறந்து, அனைத்துப் பொருட்களையும் நியாய விலையில் விற்க ஏற்பாடுகளை செய்ய வேண்டும். அத்தியாவசிய பொருட்களைத் தவிர, பொதுமக்கள் விரும்பி வாங்கும் கம்பு, கேழ்வரகு, சோளம், பயறு வகைகள் உள்ளிட்ட சிறுதானியங்களை விவசாயிகளிடமிருந்து அரசு கொள்முதல் செய்து, நியாயவிலைக் கடைகள் மூலம் விற்பனை செய்ய வேண்டும்.

நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மூலம் தமிழகம் முழுவதும் 21 நவீன அரிசி ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் குறிப்பிட்ட சில ஆலைகளை அதிநவீன முறையில் மேம்படுத்தி, தரமான அரிசியை உற்பத்தி செய்து, பொதுமக்களுக்கு வெளிச்சந்தை விலையில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நவீன அரிசி ஆலைகளில் ரூ.750 கோடி செலவில் நெல் சேமிப்புக் கலன்கள் உருவாக்கப்பட்டதில், கடந்த 5 ஆண்டுகளாக 2 சேமிப்புக் கலன்கள் மட்டுமே பயன்பாட்டில் உள்ளன. மீதியுள்ள 10-க்கும் மேற்பட்ட சேமிப்புக் கலன்கள் பயன்பாடற்ற நிலையில் உள்ளன. இந்நிலையில், தற்போது திருவாரூர் மாவட்டத்தில் புதிய சேமிப்புக் கலன்களை உருவாக்க அரசு அறிவித்துள்ளது. ஏற்கெனவே பயன்பாடற்ற நிலையில் உள்ள சேமிப்புக் கலன்களை செயல்பாட்டுக்கு கொண்டுவருவதுடன், புதிய சேமிப்புக் கலன்களை உரிய தொழில்நுட்பத்துடன் அமைத்து, முழுமையான பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும்.

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக ஓய்வுபெற்ற பணியாளர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.10 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டும். தமிழகத்தில் செங்கல்பட்டு, மதுரை உட்பட 7 மாவட்டங்களில் கூட்டுறவுத் துறை மூலம் நெல் கொள்முதல் செய்யும் முடிவை அரசு கைவிட வேண்டும். நெல் கொள்முதல் செய்வதற்கான கட்டமைப்பு வசதியை முழுமையாக கொண்டுள்ள நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மூலம் மட்டுமே மாநிலம் முழுவதும் நெல் கொள்முதல் செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்