தேங்காயை மதிப்புக்கூட்டும் பொருளாக மாற்றி, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்தித் தர வேண்டும் என தமிழ்நாடு வளர்ச்சிக் கொள்கைக் குழு துணைத் தலைவரிடம் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே பொன்னவராயன்கோட்டை கிராமத்தில், வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறையின் சார்பில் அமைந்துள்ள தென்னை வணிக வளாகத்தை ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில், தமிழ்நாடு வளர்ச்சிக் கொள்கைக் குழு துணைத் தலைவர் ஜெ.ஜெயரஞ்சன், உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜா எம்எல்ஏ ஆகியோர் நேற்று முன்தினம் ஆய்வு செய்தனர்.
பின்னர், ஜெயரஞ்சன் கூறியது: பொன்னவராயன்கோட்டை கிராமத்தில் 2011-ம் ஆண்டு 20.37 ஏக்கர் பரப்பளவில் ரூ.4 கோடி மதிப்பீட்டில் தென்னை வணிக வளாகம் அமைக்கப்பட்டு, செயல்பட்டு வந்தது. கடந்த 10 ஆண்டுகளாக முறையான பராமரிப்பு மேற்கொள்ளப்படாததால், இந்த வளாகம் செயல்படவில்லை. இந்த வளாகம் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என தமிழக முதல்வர் அறிவித்தார்.
அதனடிப்படையில், தென்னை வணிக வளாகத்தில் அமைந்துள்ள உரக்கிடங்கு, பரிவர்த்தனைக் கூடம், எண்ணெய் பிழியும் இயந்திரம், தேங்காய் ஓடு நீக்கும் கூடம், அலுவலக கட்டிடம், வணிகர்களுக்கான கடைகள், ஏலஅரங்கம், உலர் கலங்கள், வங்கி கட்டிடம், விவசாயிகள் ஓய்வறை மற்றும் உணவகம் ஆகிய உட்கட்டமைப்பு வசதிகள் தற்போது ஆய்வு செய்யப்பட்டன.
அப்போது, “தென்னை வணிக வளாகத்தை உடனடியாக செயல்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும். தேங்காயை மதிப்புக் கூட்டும் பொருளாக மாற்றி, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யக்கூடிய வாய்ப்பை ஏற்படுத்தித் தர வேண்டும்” என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த கோரிக்கை முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும் என்றார்.
மேலும், பட்டுக்கோட்டை அருகே நாடியம் கிராமத்தில் இறால் வளர்ப்போரிடமும், அம்மாபேட்டை கொக்கேரியில் உழவர் உற்பத்தியாளர் நிறுவன வளாகத்தில் உழவர் உற்பத்தியாளர் சங்க நிர்வாகிகளுடனும் அவர் கலந்துரையாடினார்.
இந்நிகழ்ச்சிகளில், எம்எல்ஏக்கள் கே.அண்ணாதுரை, என்.அசோக்குமார், கூடுதல் ஆட்சியர் காந்த், உதவி ஆட்சியர் பாலச்சந்தர், வேளாண்மை இணை இயக்குநர் ஜஸ்டின், துணை இயக்குநர் ஈஸ்வர், மீன்வளத் துறை உதவி இயக்குநர் சிவக்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago