திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில், நீலகிரி மலை ரயில் நிறுவனத்துக்கு தயாரிக்கப்பட்டு வரும் மலை ரயில் இன்ஜினின் முதல் கட்ட சோதனை ஓட்டம் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது.
நீலகிரி மலை ரயில் நிறுவனத்துக்கு திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் புதிதாக 2 மலை ரயில் இன்ஜின்கள் தயார் செய்ய ஆர்டர் கிடைத்தது. முதலில் ரூ.8.8 கோடியில் நிலக்கரி மூலம் எரியூட்டப்பட்டு, நீராவி மூலம் இயங்கும் வகையிலான ரயில் இன்ஜின் தயாரிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.
பொன்மலை ரயில்வே பணிமனையின் தலைமை மேலாளர் ஷியாமதார் ராம், உற்பத்திப் பிரிவின் துணைத் தலைமை இயந்திரவியல் பொறியாளர் எஸ்.கந்தசாமி ஆலோசனையின்படி, உற்பத்திப் பிரிவு உதவி மேலாளர் பி.சுப்பிரமணியன், முதுநிலைப் பிரிவு அலுவலர் பி.பத்மகுமார் ஆகியோர் மேற்பார்வையில் 60-க்கும் அதிகமான தொழிலாளர்கள் இந்தப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தநிலையில், ரயில் இன்ஜின் தயாரிக்கும் பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், முதல் கட்ட சோதனை ஓட்டம் பணிமனைக்கு உள்ளேயே நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. ரயில் இன்ஜின் முழுமையாக இயங்குகிறதா? இயக்கத்தின்போது ஏதேனும் கோளாறு நேரிடுகிறதா என்று இந்தச் சோதனையின்போது ஆய்வு செய்யப்பட்டது.
இந்த ஆய்வுப் பணிகள் இன்னும் ஓரிரு நாட்கள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு, சோதனை ஓட்டம் வெற்றி பெற்ற பிறகு, வர்ணம் பூசும் பணி மேற்கொள்ளப்பட்டு, இந்த மாத இறுதிக்குள் ஊட்டிக்கு ரயில் இன்ஜின் அனுப்பிவைக்கப்படும் என்று பணிமனை பொறியாளர்கள் தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago