திருச்சி மாவட்டத்தில் விற்பனைக் குழு கட்டுப்பாட்டில் செயல்படும் ஒழுங்குமுறை விற்பனை கூடங்களை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் சு. சிவராசு கேட்டுக் கொண்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: திருச்சி மாவட்டத்தில் விற்பனைக் குழு கட்டுப்பாட்டில் லால்குடி, துறையூர், மண்ணச்சநல்லூர், மணப்பாறை, துவரங்குறிச்சி, காட்டுப்புத்தூர், தாத்தையங்கார்பேட்டை ஆகிய இடங்களில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் உள்ளன.
இவற்றில், நெல், உளுந்து, நிலக்கடலை, எள், பருத்தி, மஞ்சள், வெல்லம், முந்திரி, தேங்காய், மிளகாய், மல்லி, மரவள்ளி போன்ற வேளாண்மை விளைப் பொருட்களைக் கொண்டு வந்து விற்பனை செய்து நல்ல விலை பெறலாம்.
ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் வேளாண் விளை பொருட்களை விற்பனை செய்வதால் விவசாயிகளுக்கு மறைமுக ஏலம் மூலம் தங்கள் விளைபொருள்களின் தரத்துக்கு ஏற்ப அதிகபட்ச விலை கிடைக்க வாய்ப்புள்ளது. விற்பனை செய்யப்படும் விளைப் பொருட்களுக்கு தரகு மற்றும் கமிஷன் பிடித்தம் ஏதுமின்றி நேரிடையாக விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. சரியான எடை, உடனடி பணப்பட்டுவாடா, பொருளீட்டுக் கடன் வசதி, குளிர்பதன வசதி, காப்பீடு வசதி, உழவர் நல நிதித் திட்டம் ஆகிய வசதிகள் ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் உள்ளன.
விவசாயிகள் ஓராண்டில் ஒரு டன் அளவு விளைபொருட்களை ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள் மூலம் விற்பனை செய்திருந்தால் உழவர் நலநிதித்திட்டத்தில் உறுப்பினராக சேர்க்கப்படுவார்கள். இவர்கள் விபத்து மற்றும் பாம்புக் கடியால் இறந்து விட்டால் ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்கப்படும். காப்பீட்டுக்கான பிரீமியத் தொகையை அரசே ஏற்கும்.
எனவே, விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த வேளாண் விளைபொருட்ளை ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் கொண்டு வந்து மறைமுக ஏலத்தில் விற்பனை செய்து அதிகபட்ச விலை பெற்று பயன் அடையலாம் என அவர் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago