வெளி வளங்களை சார்ந்திருப்பதைக் குறைத்து தன்னகமயமாக்கலை அதிகப்படுத்த வேண்டும் என பெல் நிறுவன தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் நளின் ஷிங்கால் தெரிவித்தார்.
திருச்சி பெல் நிறுவனத்தில் முதலாவது டிஜிட்டல் வாரம் மற்றும் தூய்மைக்கான இருவார இயக்கம் நேற்று முன்தினம் தொடங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சிக்கு நிறுவன பொது மேலாளர் (பொறுப்பு) எஸ்.வி.சீனிவாசன் தலைமை வகித்தார். பெல் நிறுவனத் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் நளின் ஷிங்கால் காணொலிக் காட்சி வாயிலாக டிஜிட்டல் வாரத்தை தொடங்கி வைத்துப் பேசியது: நிறுவனத்துக்குள் தகவல் தொழில்நுட்ப திறமைகள் மற்றும் திறன்கள் பெருமளவு உள்ளது. அனைத்து ஊழியர்களுக்கும் பெல் வழங்கும் சுதந்திரம் மற்றும் ஆதரவுடன் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் வெற்றிகரமான வளர்ச்சிக்கு அப்பால் முன்னோக்கி எடுத்துச் செல்லப்பட வேண்டும்.
அறிவுசார் சொத்துரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். இவற்றைக் கொண்டு நிறுவனத்துக்கு அதிகபட்ச வருவாய் ஈட்டுவதற்காக தயாரிப்புகளை சந்தைப்படுத்தக் கூடிய சிறந்த வணிக மாதிரியை உருவாக்க வேண்டும். வெளி வளங்களைச் சார்ந்திருப்பதைக் குறைத்து, தன்னகமயமாக்கலை அதிகப்படுத்த வேண்டும். புதிய தயாரிப்புகள் மற்றும் கருவிகளை கண்டுபிடித்து உருவாக்கவும், ஒரு வணிக மாதிரியை உருவாக்கவும் அவற்றை சந்தைப்படுத்தவும் இளம் ஊழியர்கள் தங்கள் தனித் திறன்களையும் நிறுவனத்தில் கிடைக்கும் வளங்களையும் பயன்படுத்த வேண்டும் என்றார்.
நிகழ்ச்சியில், தகவல் தொடர்பு தீர்வுகள் மற்றும் சேவைகள் துறையாக சுயமாக மேம்படுத்தப்பட்டு, தற்போது வணிக ரீதியாக பயன்படுத்தப்பட்டு வரும் செயலிக்கு மாற்றாக இணையவழி காணொலிக் காட்சி செயலி ஆகியவற்றை அவர் தொடங்கி வைத்தார்.
டிஜிட்டல் வாரத்தின் ஒரு பகுதியாக ஊழியர்களுக்கு பல்வேறு போட்டிகள் மற்றும் செயல்பாடுகள் திட்டமிடப்பட்டுள்ளன.
தூய்மைக்கான இருவார இயக்கம் தொடக்கத்தையொட்டி கழிவு மேலாண்மை, நெகிழிப் பொருட்கள் பயன்பாட்டை மறுத்தல், பசுமை பெல் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான புதிய முயற்சிகளை அங்கீகரித்தல் போன்ற தூய்மை மற்றும் சுகாதாரப் பணிகள் தொடக்கப்பட்டன.
தொடர்ந்து தூய்மைக்கான உறுதிமொழியை பொது மேலாளர் (பொறுப்பு) எஸ்.வி.சீனிவாசன் ஏற்புவித்தார். அனைத்து ஊழியர்களும் உறுதிமொழி ஏற்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago