கிருஷ்ணகிரி மாவட்டம் மயிலாடும்பாறையில் - 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பாறை ஓவியங்கள் ஆய்வு :

தொகரப்பள்ளி அருகில் உள்ள மயிலாடும்பாறையில் 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பாறை ஓவியங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் ஒன்றியம் தொகரப்பள்ளி அருகில் உள்ள மயிலாடும்பாறையில் பாறை ஓவியங்களும் உள்ளதை ஆய்வு மேற்கொண்ட அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜ் கூறியதாவது:

மயிலாடும்பாறையில் அகழாய்வு பணி நடக்கும் இடத்திற்கு 500 மீட்டர் தொலைவில், நெகுல்சுனை என்ற இடத்தில் உள்ள பெரிய பாறையில் நீர்சுனை உள்ளது. அந்த சுனையின் மேற்பகுதியில் உள்ள கல்லின் அடிப்பகுதியிலும், கிழக்கு பகுதியிலும் 2 விதமான பாறை ஓவியங்கள் காணப்படுகின்றன.

இங்கு புதிய கற்காலத்தைச் சேர்ந்த செங்காவி ஓவியங்களும், பெருங்கற்படைக் காலத்தைச் சேர்ந்த வெண்சாந்து ஓவியங் களும், ஒரே இடத்தில் காணப்படுவது தொடர்ந்து பல 100 ஆண்டுகளாக மக்கள் இவ்விடத்தில் வாழ்ந்து வந்ததை தெரிவிக்கிறது.

செங்காவி ஓவியங்கள் சுமார் 4 ஆயிரம் ஆண்டுகளும், வெண்சாந்து ஓவியங்கள் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளும் பழமையானவையாகும். வீட்டினுள் மனிதன் நிற்பது போன்றும், அவ்வீட்டின் முன்னாள் குதிரை, ஒட்டகம் போன்ற விலங்குகள் இருப்பதும் போன்று 3 ஓவியங்கள் உள்ளன.

ஆண், பெண் உறவுக்காட்சியும் ஓவியமாய் வரைந்துள்ளார்கள். 6 பேர் குழுவாக சண்டையிடுவது போல் காட்டப்பட்டுள்ளது. சில வேட்டைக் காட்சிகளும், போர் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. இதில் ஒரு மனித உருவமும், ஒரு விலங்கின் உருவமும், மயில் திரும்பிப் பார்ப்பது போன்ற தலைப்பகுதியும் காணப்படுகிறது. மனிதர், விலங்குகளோடு இங்கு பல குறியீடுகளும் காணப்படுகின்றன. இவ்வோவி யங்கள் அனைத்தும் சிறிய அளவில் கோட்டுருவமாக வரையப்பட்டுள்ளன.

மயிலாடும்பாறை தமிழகத்தின் முக்கியமான தொல்லியல் இருப்பிடம் என்பதை பல தொல்லியல் பொருட்களோடு இணைந்து இப்பாறை ஓவியங்களும் கூறுகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிகழ்வின் போது மயிலாடும்பாறை அகழாய்வு இயக்குநர் சக்திவேல், தொல்லியல் அகழாய்வு அலுவலர் பரந்தாமன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE