காலையில் தூத்துக்குடி, மாலையில் கோவில்பட்டி; துறைத் தேர்வுக்கான மையம் ஒதுக்கீட்டில் குளறுபடி: தொடர் புகாரால் சுதாரித்த தேர்வாணையம்

By சு.கோமதிவிநாயகம்

தமிழகத்தில் அரசு பணியாளர் தேர்வாணையம், ஆசிரியர் தேர்வு வாரியம் ஆகியவற்றின் மூலம் பணி நியமனம் பெற்ற பணியாளர்களுக்கு துறைத் தேர்வுகள் நடத்தப்படுவது வழக்கம். இந்தாண்டுக்கான துறைத் தேர்வு நாளை (16-ம் தேதி) நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

துறைத் தேர்வுக்கு விண்ணப்பித்திருந்த கோவில்பட்டி அருகே பிள்ளையார்நத்தம் அரசு மேல்நிலைப்பள்ளி வரலாறு பாட ஆசிரியை வி.ஜான்சிராணி, நுழைவுச் சீட்டை தரவிறக்கம் செய்து பார்த்தார்.

இதில், காலை 9.30 மணி தேர்வான முதல் தாள் குறியீட்டு எண் 65-க்கு தூத்துக்குடி ஏ.பி.சி.மகாலட்சுமி கல்லூரி தேர்வு மையத்திலும், மாலை 1.30 மணிக்கு மற்றொரு தாள் குறியீட்டுஎண் 72-க்கு கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரி மையம் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது. காலை 9.30 மணிக்கு தொடங்கும் தேர்வு மதியம் 12.30 மணிக்கு நிறைவடையும். அதன் பின்னர் தூத்துக்குடியில் இருந்து மதியம்1.30 மணிக்கு கோவில்பட்டிக்கு வருவது என்பதுசிரமமானது. இதுகுறித்து தெரிவிக்க தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய இலவச எண்ணுக்கு அவர் அழைத்துள்ளார். ஆனால், அதனை எடுத்து யாரும் பேசவில்லை. இதே போன்று பலருக்கும் குளறுபடி ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையே, தொடர் புகார் எதிரொலியாக, நேற்று மாலை அனைத்து தேர்வர்களுக்கும் திருத்தப்பட்ட நுழைவுச் சீட்டு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது. இதில், காலை, மாலை தேர்வுகளுக்கு ஒரே மையம் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால் தேர்வர்கள் மகிழ்ச்சியடைந்தனர். பிள்ளையார்நத்தம் அரசு மேல்நிலைப்பள்ளி வரலாறு பாட ஆசிரியை வி.ஜான்சிராணிக்கு ஒரே மையமாக கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரி மையம் ஒதுக்கப்பட்டது.

இதுகுறித்து சமூக ஆர்வலர் அ.ஜெயப்பிர காஷ் நாராயணசாமி கூறும் போது, “அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு காலையில் நடைபெறும் தேர்வு தூத்துக்குடியிலும், மதியம் நடைபெறும் தேர்வு கோவில்பட்டியிலும் எனக் குறிப்பிட்டிருந்ததால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகினர். தூத்துக்குடியில் இருந்து கோவில்பட்டிக்கு 60 கி.மீ. தூரம். காலை தேர்வு 12.30 மணிக்கு நிறைவடையும். தேர்வு எழுதுபவர்கள், மையத்தை விட்டு வெளியே வர சுமார் அரைமணி நேரம் வரை ஆகும். தூத்துக்குடியில் இருந்து ஒரு மணிக்கு காரில் புறப்பட்டாலும், 1.30 மணிக்கு கோவில்பட்டியை சென்றடைய முடியாது. இது மிகப்பெரிய குளறுபடி.

தற்போது குளறுபடி சரிசெய்யப்பட்டி ருந்தாலும் எதிர்காலங்களில் இதுபோன்று நடைபெறாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்” என்றார் அவர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்