கூட்டுறவு சங்கத்தில் விதிகளை மீறி நகைக்கடன் பெற்றது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் திருவலம் கூட்டுறவு சங்கத்தின் தலைவர் 6 மாதங்களுக்கு தற்காலிக பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த திருவலம் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கத்தின் தலைவராக இருப்பவர் சுலோச்சனா. இவரது கட்டுப் பாட்டில் உள்ள 3 ரேஷன் கடை களின் விற்பனையாளர்கள் கடந்த ஜூன் 30-ம் தேதி இடமாற்றம் செய்யப்பட்டனர்.
இது தொடர்பான பிரச்சினையில் கூட்டுறவு சங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 6 ரேஷன் கடைகள் கடந்த ஜூலை 1-ம் தேதி முதல் 5-ம் தேதி வரை திறக்கப்படாமல் பொது விநியோகத் திட்டமும் பாதிக் கப்பட்டதாக புகார் எழுந்தது.
திருவலம் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கம் பிரச்சினை குறித்து அரசு நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், கூட்டுறவுத் துறை அதிகாரிகளை கடுமையாக பேசினார்.
இதனால், திருவலம் கூட்டுறவு சங்க பிரச்சினை மீண்டும் விஸ்வரூபம் எடுத்தது. இது தொடர்பான விரிவான விசாரணை நடத்தியதுடன் பிரச்சினைக்கு காரணமான கூட்டுறவு சங்கத் தலைவர் சுலோச்சனா 6 மாதங்களுக்கு தற்காலிகமாக பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் திருகுண ஐயப்பதுரை உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக அதிகாரிகள் தரப்பில் விசாரித்தபோது, ‘‘கூட்டுறவு சங்க துணை விதிகளின் படி தலைவரோ அல்லது நிர்வாகக்குழு உறுப்பினர்களோ தங்கள் பெயரில் சங்கத்தில் கடன் உட்பட எந்த ஆதாயமும் பெறக் கூடாது. ஆனால், விதிகளை மீறி சுலோச்சனா தனது பெயரில் கடந்த பிப்ரவரி மாதம் 18-ம் தேதி ரூ.90 ஆயிரத்துக்கு நகைக்கடன் பெற்றுள்ளார். அந்த கடனையும் கூட்டுறவு சங்கத்தில் பிரச்சினை ஏற்பட்ட பிறகு ஜூலை 29-ம் தேதி திரும்ப செலுத்தி நகையை மீட்டுள்ளார்.
சங்க தலைவர் என்ற முறையில் இவர் சுட்டிக்காட்டிய நபர்களுக்கு கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி 28-ம் தேதி தீர்மானத்தின் படி 41 உறுப்பினர்களுக்கு கறவை மாடுகள் வாங்க கடனாக ரூ.31 லட்சம் தொகையை அதே ஆண்டு ஏப்ரல் மாதம் 7-ம் தேதி வழங்கியுள்ளனர். இதில், 20 கடன்களில் சுமார் ரூ.8 லட்சம் வரை திரும்ப செலுத்தாமல் உள் ளனர்.
அவரது உறவினர்களுக்கு வழங்கிய இந்த கடன் தொகையை வசூலிக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சங்கத்துக்கு அவப் பெயர் ஏற்படுத்தியது என பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் அவர் 6 மாதங்களுக்கு தற்காலிக பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும், முறைகேடு தொடர்பாக வணிக குற்றப்புலனாய்வு காவல் துறையினர் விசாரணைக்கு உட்படுத்தவும் நடவடிக்கை எடுக் கப்பட்டுள்ளது’’ என தெரிவித்தனர்.
இது தொடர்பாக தற்காலிக பதவி நீக்கம் செய்யப்பட்ட தலை வர் தரப்பினர் கூறும்போது, ‘‘சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த 11-ம் தேதி வெளியான தீர்ப்பின் அடிப்படையில் கூட் டுறவு சங்கத்தின் தலைவரை தற்காலிக பதவி நீக்கம் செய்தது செல்லாது. அவர் கூட்டுறவு சங்கத்தின் உறுப்பினர் என்ற அடிப்படையில் தான் நகைக்கடன் பெற்று அதை முறையாக திரும்பச் செலுத்தியுள்ளார். நகைக்கடன் தள்ளுபடி பெற வேண்டும் என்ற எண்ணம் எல்லாம் அவருக்கு இல்லை.
அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக இதுபோன்ற நடவடிக் கையை எடுத்துள்ளனர். அதை அவர் சட்டரீதியாக எதிர் கொள் வார்’’ என தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago