திருவண்ணாமலை மாவட்டம் சந்தவாசல் அருகே நடைபெற்ற கோர விபத்தில் உயிரிழந்த 7 பேரது உடல்களும் பிரேதப்பரிசோதனைக்கு பிறகு உற வினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதற்கிடையில், தப்பி ஓடிய லாரி ஓட்டுநரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
தி.மலை மாவட்டம் சந்தவாசல் அருகே முனிவந்தாங்கல் கிராமம் கூட்டுச்சாலையில் லாரி மீது கார் மோதி நேற்று முன் தினம் விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில், வேலூர் விருப்பாட்சிபுரம் பகுதியில் வசிக்கும் மூர்த்தி, அவரது மனைவி கலா, அவர்களது பேத்தி நிஷா (3 மாதம்) மற்றும் 3 பெண்கள் என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் உயிரிழந்தனர்.
உயிரிழப்பு 7-ஆக உயர்வு
மேலும், படுகாயமடைந்த மூர்த்தி மகன் சசிக்குமார் உட்பட 4 பேர், வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அதில், சிகிச்சை பலனின்றி மூர்த்தியின் உறவினர் ராதிகா நேற்று முன் தினம் இரவு உயிரிழந்தார். இதனால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7-ஆக உயர்ந்தது.இதற்கிடையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சசிக் குமார், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். அவரது நிலைமையும் கவலைக்கிடமாக உள்ளதாக காவல் துறையினர் தரப்பில் கூறப்படுகிறது. இந்த கோர விபத்தில் மூர்த்தியின் மூன்றரை வயது பேரன் குமரன் காயமின்றி உயிர் பிழைத்துள்ளான்.
நெஞ்சை உலுக்கியது
இந்நிலையில், ஆரணி அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை முடிக்கப்பட்டு மூர்த்தி உட்பட 6 பேரின் உடல்கள் மற்றும் வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்கு பிறகு ராதிகா என 7 பேரது உடல்களும் உறவினர்களிடம் ஒப்படைக் கப்பட்டன. உடல்களை பெற்றுக் கொண்டபோது, உறவினர்கள் கதறி அழுதது நெஞ்சை உலுக்கியது.
காவல் துறையினர் விசாரணை
இதையடுத்து, அவர்களது உடல்கள் வேலூர் கொண்டு செல்லப்பட்டு, இறுதி சடங்கு செய்யப்பட்டது. இந்த விபத்து குறித்து சந்தவாசல் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, தப்பி ஓடிய லாரி ஓட்டுநரான ஆரணி அடுத்த சித்தேரி கிராமத்தில் வசிக்கும் ராமநாதனை நேற்று கைது செய்து விசாரித்து வருகின்றனர்.முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago