கீழ்பவானி பாசனத்துக்கு நாளை முதல் (15-ம் தேதி) நீர் திறக்க வேண்டும், என கீழ்பவானி விவசாயிகள் நலச் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து சங்கத்தின் தலைவர் செ.நல்லசாமி வெளியிட்டுள்ள அறிக்கை:
பவானி சாகர் அணையில் 32.8 டி.எம்.சி. நீரினைத் தேக்கி வைக்க முடியும். தற்போது அணையில் 27 டி.எம்.சி. நீர் இருப்பு உள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள அணைகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளதால், பவானிசாகர் அணைக்கான நீர் வரத்து அதிகரித்து, அணையில் இருந்து உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.
எனவே, தற்போதைய நீர் இருப்பை கருத்தில் கொண்டு, ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் கீழ்பவானி பாசனத்துக்கு உட்பட்ட ஒரு லட்சத்து 3500 ஏக்கருக்கு நீர் திறக்க வேண்டும் என்ற கோரிக்கை ஏற்கப்படவில்லை.
கீழ்பவானித் திட்டம் ஒரு நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டம் என்பதை உணர்ந்து, கீழ்பவானி பாசனத்துக்கு உடனடியாக நீர் திறக்கும் தேதியை அரசு அறிவிக்க வேண்டும். இதன்மூலம் நிலத்தைத் தயார் செய்வதற்கும், இடுபொருட்களை சேகரிக்கவும், திட்டமிட்டு செயல்படுவதற்கும் ஏற்புடையதாக இருக்கும்.
இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு ஆங்காங்கே நடந்து கொண்டிருக்கும் கால்வாய் மராமத்துப்பணிகளை பொதுப்பணித்துறை விரைந்துமுடிக்க வேண்டும். நாளை (15-ம் தேதி) பாசனத்துக்கு தண்ணீர் திறக்க வேண்டும். இது தொடர்பான அறிவிப்பு வராதது கீழ்பவானி விவசாயிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago