தூய்மைப் பணியாளர்களின் நிலை குறித்து ஆய்வு செய்வதற்காக நேற்று தேசிய தூய்மை பணியாளர் ஆணையத் தலைவர் எம்.வெங்கடேசன் திருவள்ளூருக்கு வந்தார்.
அவர், திருவள்ளூர்- ஈக்காடு சாலையில்உள்ள திருவள்ளூர் நகராட்சி தூய்மைப்பணியாளர்களின் குடியிருப்புகளில் ஆய்வுமேற்கொண்டார். அப்போது, தூய்மை பணியாளர்களின் வாழ்க்கைத்தரம், வாரிசு களின் கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்டவை குறித்து கேட்டறிந்தார்.
அப்போது, தங்களின் குடியிருப்பு பகுதிகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. குடியிருப்பு பகுதிக்குள் கழிவுநீர் வருகிறது, வாரிசுகளுக்கு வேலையில்லை என தூய்மைப் பணியாளர்கள் தெரிவித்தனர். இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு வெங்கடேசன் அறிவுறுத்தினார்.
தொடர்ந்து, தேசிய தூய்மை பணியாளர் ஆணையத் தலைவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
தமிழகம் முழுவதும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளில் தூய்மைப் பணியில் ஈடுபடுபவர்கள் ஒப்பந்த ஊழியர்களாக உள்ளனர். அவர்கள், குறைந்த ஊதியம் பெற்று, விடுப்பு ஏதுமில்லாமல், அதிக நேரம் பணிபுரிகின்றனர்.
இது தொடர்பாக புகார் தெரிவித்தால் ஒப்பந்ததாரர் வேலையை விட்டு நிறுத்திவிடும் அவலம் உள்ளது. ஒப்பந்த முறையால் ஒப்பந்ததாரர்கள் அதிக லாபம் பெறுகின்றனர். ஆகவே, தமிழக அரசு, தூய்மைப் பணியில் ஒப்பந்த முறையை ஒழிக்க வேண்டும்.
மேலும், தமிழகத்தில் ஒப்பந்த தூய்மைப் பணியாளர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான குழுவை தமிழக அரசு அமைக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், தூய்மை பணியாளர்களின் வாழ்வா தாரத்தை மேம்படுத்துவது தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இதில், ஆணையத் தலைவர் கூறும்போது, "உள்ளாட்சி அமைப்புகளில் தூய்மைப் பணியில் ஈடுபடும் ஒப்பந்த பணியாளர்களுக்கு சம்பளப் பட்டியலை முழு விவரத்துடன் அளிக்க வேண்டும். தூய்மைப் பணியாளர்களுக்கு 3 மாதங்களுக்கு ஒருமுறை மருத்துவ பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என அறிவுறுத்தல்களை வழங்கினார்.
இந்நிகழ்வுகளில், மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண் குமார், மாவட்ட வருவாய் அலுவலர் மீனா பிரியதர்ஷிணி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜெயகுமார், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் சரவணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago