பவானிசாகரில் வேளாண் கல்லூரி அமைக்க கையெழுத்து இயக்கம் நடத்த கம்யூ. தீர்மானம் :

By செய்திப்பிரிவு

பவானிசாகரில் வேளாண்மைக் கல்லூரி அமைக்க வலியுறுத்தி, கையெழுத்து இயக்கம் நடத்தி முதல்வருக்கு அனுப்பி வைக்கப்படும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பேரவைக்கூட்டம் பவானிசாகரில் எஸ்.கிருஷ்ணன் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம்:

பவானிசாகரில் ஆயிரம் ஏக்கர் பரப்பளவில், கோவையிலுள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தின் ஆராய்ச்சிப்பண்ணை அமைந்துள்ளது. போதுமான தண்ணீர் வசதியும், தேவையான இடமும், ஓரளவு உள்கட்டமைப்பு வசதிகளும் உள்ளன. சட்டப்பேரவைத் தேர்தலின் போது திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், ஈரோடு மாவட்டத்தில் வேளாண்மைக் கல்லூரி அமைக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இக்கல்லூரியை பவானிசாகரில் அமைப்பதே பொருத்தமானதாக இருக்கும். எனவே, தேர்தல் அறிக்கையை நிறைவேற்றும் வகையில், ஈரோடு மாவட்டத்திற்கான வேளாண் கல்லூரியை பவானிசாகரில் அமைக்க வேண்டும்.

இக்கோரிக்கையின் மீது அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில், பொதுமக்களிடம் கையெழுத்து இயக்கத்தினை நடத்தி, கையெழுத்துகளைப் பெற்று, கோரிக்கை மனுவினை தமிழக முதல்வர் மற்றும் மாவட்ட அமைச்சருக்கு அனுப்பி வைக்கப்படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில், கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.மோகன் குமார், ஒன்றிய செயலாளர் பி.ஏ.வேலுமணி,உத்தண்டியூர் ஊராட்சித் தலைவர் எஸ்.பூங்கொடி, கட்டுமான தொழிலாளர் சங்கத்தலைவர் ரஞ்சித் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்