சேலத்தில் கரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில், கரோனா சிறப்பு சித்த மருத்துவப் பிரிவு நேற்று முன்தினம் (12-ம் தேதி) மூடப்பட்டது. கரோனா மூன்றாவது அலையில் இருந்து தற்காத்துக் கொள்ள அரசு சித்த மருத்துவர் வெற்றிவேந்தன் ஆலோசனை வழங்கியுள்ளார்.
தமிழகத்தில் கரோனா தொற்று 2-வது அலை பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. சேலம் மாவட்டத்தில் கரோனா 2-வது அலை உச்சம் தொட்ட போது, அதிகபட்சமாக கடந்த மே 21-ம் தேதி 1492 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். தற்போது படிப்படியாக குறைந்து தினசரி பாதிப்பு 100-க்கும் கீழ் குறைந்துள்ளது.
கரோனா இரண்டாவது அலையின்போது சேலம் கோரிமேட்டில் கரோனா சிறப்பு சித்த மருத்துவப் பிரிவு தொடங்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. கடந்த ஏப்ரல் 12-ம் தேதி தொடங்கப்பட்ட சித்த மருத்துவப் பிரிவு தொற்று பரவல் குறைந்ததால் நேற்று முன்தினம் (12-ம் தேதி) மூடப்பட்டது. இங்கு கடந்த நான்கு மாதங்களில் 1555 பேர் உள்நோயாளியாக அனுமதியாகி 1418 பேர் பூரண குணமடைந்தனர். 137 பேர் மேல் சிகிச்சைக்கு பரிந்துரை செய்யப்பட்டனர். தற்போது, சித்தா சிறப்பு பிரிவு மூடப்பட்டாலும் தொடர்ந்து சித்தா பிரிவு பராமரிப்பு செய்து தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சேலம் அரசு சித்த மருத்துவர் வெற்றிவேந்தன் கூறியது:
கரோனா 3-வது அலை குழந்தைகளை பாதிக்கும் என்று மருத்துவ வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். 2 வயது முதல் 8 வயது வரையிலான குழந்தைகள் சித்த மருத்துவ கடைகளில் விற்பனை செய்யும் உரை மாத்திரை வாரத்தில் இரண்டு நாட்கள் காலை, இரவு வேளை சாப்பிட்டதற்கு பின்பு சாப்பிட்டு வர வேண்டும். அதேபோல, குழந்தைகளுக்கு வாரம் இரண்டு முறை நிலவேம்பு கசாயம் 30 மில்லி வழங்கி வருவதன் மூலம், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, கரோனா பரவலில் இருந்து தற்காத்துக் கொள்ள முடியும்.
பெரியவர்கள் அமுக்கரா சூரண மாத்திரை வாரம் மூன்று நாட்களுக்கு காலை, இரவு வேளைகளில் உட்கொள்ள வேண்டும். அதேபோல, நிலவேம்பு கசாயம் வாரம் இரண்டு முறை 60 மில்லி அருந்தி வர வேண்டும். வெளியிடங்களுக்கு செல்லும் பெரியவர்களால் தான் குழந்தைகளுக்கு கரோனா தொற்று பரவ காரணமாக இருக்கும் என்பதால், கண்டிப்பாக தடுப்பூசி போட்டுக் கொள்ளுதல், முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளி பின்பற்றுவது, அடிக்கடி கையை சோப்பு போட்டு கழுவி வருவதன் மூலம் கரோனா 3-வது அலை பாதிப்பை முற்றிலும் தடுத்து நிறுத்த முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago