நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலைய சுரங்க நடைபாதையை பொதுமக்கள் வசதிக்காக காலை 6 மணியில் இருந்து இரவு 9 மணி வரை திறந்துவிட வேண்டும் என, மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்தார்.
சாலைப் பாதுகாப்பு, விபத்து தடுப்பு முன்னேற்பாடுகள் மற்றும் மேம்பாட்டுப் பணிகள் குறித்து துறைசார்ந்த அலுவலர்களுடன் கலந்தாய்வுக் கூட்டம் நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியர் மா.அரவிந்த் தலைமையில் நடைபெற்றது. எஸ்பி பத்ரிநாராயணன் முன்னிலை வகித்தார்.
ஆட்சியர் பேசியதாவது:
கன்னியாகுமரி மாவட்டத்தில் பழுதடைந்த சாலைகளை உடனடியாக சீரமைக்கவும், புதிய சாலைப்பணிகளை தொடங்கவும் துறைசார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.
நாகர்கோவில் நகரில், செட்டிகுளம் முதல் ராமன்புதூர் செல்லும் வழி, வடசேரி முதல் வெட்டூர்ணிமடம் வரையிலான சாலைகள் மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ளன. இவற்றை உடனடியாக சீர்செய்து விபத்துகளை தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.
கன்னியாகுமரி கடற்கரை சாலையில் மின்விளக்கு அமைக்க வேண்டும். நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையத்தில் பயணிகளுக்காக புதிய இருக்கைகள் அமைக்க வேண்டும். அண்ணா பேரூந்து நிலைய சுரங்க பாதையை காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்துவிட வேண்டும். நாகர்கோவிலில் சாலையோரங்களில் வாகனங்கள் நிறுத்துவோர் மற்றும் இருசக்கர வாகனங்களில் இரண்டு பேருக்கு அதிகமாக பயணிப்போருக்கு, காவல்துறையினர் உடனடியாக அபராதம் விதிக்க வேண்டும்.
போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள கடைகளை அகற்ற வேண்டும். மாவட்டத்தில் அதிக விபத்துகள் ஏற்படும் பகுதிகளைக் கண்டறிந்து எச்சரிக்கை பலகைகள் வைக்க வேண்டும், என ஆட்சியர் தெரி வித்தார்.
மாவட்ட வருவாய் அலுவலர் ரேவதி, மாநகராட்சி ஆணையர் ஆஷாஅஜித், பத்மநாபபுரம் சார் ஆட்சியர் சிவகுரு பிரபாகரன், கோட்டாட்சியர் தனபதி உட்பட பலர் கலந்துகொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago