தூத்துக்குடி மாவட்ட ஊராட்சிக் கூட்டத்தில் - அதிமுக கொண்டு வந்த தீர்மானங்கள் தோற்கடிப்பு : பெரும்பான்மை பலம் இருந்தும் திமுகவுக்கு அதிக ஆதரவு

By செய்திப்பிரிவு

தூத்துக்குடி மாவட்ட ஊராட்சிக் குழுவின் சாதாரணக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட ஊராட்சித் தலைவர் ஆர்.சத்யா தலைமை வகித்தார். துணைத்தலைவர் செல்வக்குமார், செயலாளர் ருக்மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில், திரவக் கழிவு மேலாண்மை திட்டத்தில் ரூ.1 கோடியே 29 லட்சத்து 48 ஆயிரம் செலவில் 3 ஊராட்சி பகுதிகளில் வாறுகால் அமைக்கும் பணி, பிரதம மந்திரி கிராம சாலை மேம்பாட்டு திட்டத்தில் ரூ.21 கோடியே 49 லட்சத்து 80 ஆயிரம் செலவில் 7 சாலைகள் அமைக்கும் பணி ஆகிய இரண்டுக்கும் அனுமதி கோரும் 2 தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டன.

கூட்டத்தில் தலைவர், துணைத் தலைவர் மற்றும் 14 உறுப்பினர்கள் என மொத்தம் 16 பேர் கலந்து கொண்டனர். ஒரு உறுப்பினர் மட்டும் பங்கேற்கவில்லை. கூட்டம் தொடங்கியதும் தீர்மானத்துக்கு திமுக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து முழக்கமிட்டனர். அவர்களுக்கு ஆதரவாக அதிமுக உறுப்பினர்கள் சிலரும் தீர்மானத்துக்கு எதிராக குரல் கொடுத்தனர்.

அதிக உறுப்பினர்கள் எதிர்ப்புதெரிவித்ததால் இரண்டு தீர்மானங்களும் நிறைவேற்றப்படாமல் கூட்டம் முடிவடைந்தது. அதிமுக பெரும்பான்மை பலம் உள்ள மாவட்ட ஊராட்சி கூட்டத்தில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை திமுக உறுப்பினர்கள் தோற்கடித்திருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து துணைத்தலைவர் செல்வக்குமார் கூறும் போது,‘‘ மாவட்ட ஊராட்சி உறுப்பினர்களிடம் எந்தவித ஆலோசனையும் இன்றி தலைவரே கூட்டத்தில் தீர்மானங்களை தன்னிச்சையாக கொண்டு வந்ததால், அதிகப்படியான உறுப்பினர்கள் எதிர்ப்புதெரிவித்தனர். இதனால் அனைத்துதீர்மானங்களும் ஒத்தி வைக்கப்பட்டன’’ என்றார்.

தூத்துக்குடி மாவட்ட ஊராட்சியை பொறுத்தவரை மொத்தமுள்ள 17 வார்டு உறுப்பினர் பதவிகளில் 12 இடங்களை அதிமுக வென்றிருந்தது. திமுக 5 இடங்களை மட்டுமே பிடித்தது. இதையடுத்து அதிமுகவை சேர்ந்த ஆர்.சத்யா தலைவராகவும், செல்வக்குமார் துணைத் தலைவராகவும் தேர்வுசெய்யப்பட்டனர். இதில் துணைத் தலைவர் செல்வக்குமார் அண்மையில் திமுகவில் இணைந்துவிட்டார். அதுபோல மேலும் ஒரு உறுப்பினரும் முறைப்படி திமுகவில் இணைந்துள்ளார்.

இதனால் திமுக உறுப்பினர்களின் பலம் 7 ஆக அதிகரித்துள்ளது. ஆனால், நேற்றைய கூட்டத்தில் அதிமுக உறுப்பினர்கள் 9 பேர் கலந்து கொண்ட போதும் தீர்மானம் தோற்கடிக்கப்பட்டுள்ளது. அதிமுகஉறுப்பினர்கள் சிலரும் திமுகவினருக்கு ஆதரவாக தீர்மானத்தை எதிர்த்ததே இதற்கு காரணமாகும். தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து மாவட்ட ஊராட்சி தலைவர் பதவியை கைப்பற்ற திமுக முயற்சி செய்துவருவதாக அதிமுக சார்பில் ஏற்கெனவே மாவட்ட ஆட்சியரிடம் புகார்அளித்துள்ள நிலையில், தற்போதுதீர்மானம் தோற்கடிக்கப்பட்டிருப்பது அதிமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்