வழிபாட்டு தலங்கள் 3 நாட்கள் மூடல்: பக்தர்கள் ஏமாற்றம் :

By செய்திப்பிரிவு

கரோனா தொற்று பரவலைத் தடுக்கும் வகையில் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் வழிபாட்டுத தலங்கள் 3 நாட்கள் மூடப்பட்டதால் பக்தர்கள் ஏமாற்றமடைந்தனர்.

கரோனா தொற்றின் 3-வது அலை பரவலை தடுக்கும் வகையில்தமிழகத்தில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு எடுத்துள்ளது. விடுமுறை நாட்களில் வழிபாட்டு தலங்களில் பக்தர்கள் அதிகளவில் கூடுவதை தவிர்க்கும் வகையில் வாரத்தில் வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு ஆகிய மூன்று நாட்களும் பக்தர்கள் தரிசனத்துக்கு அரசு தடை விதித்துள்ளது.

இதன் காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உள்ளிட்ட மாவட்டத்தில் உள்ள அனைத்து இந்துகோயில்களிலும் பக்தர்கள் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் கோயில்களில் ஆகம விதிப்படி பூஜைகள் மட்டும் நடைபெறுகின்றன. நேற்று வெள்ளிக்கிழமை என்பதால் பலர் கோயில்களுக்கு வந்தனர். ஆனால், உள்ளே செல்ல அனுமதி இல்லாததால் கோயிலுக்கு வெளியே நின்று கோபுர தரிசனம் செய்துவிட்டு திரும்பிச் சென்றனர்.

பிரசித்தி பெற்ற தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலயம், தூய திருஇருதய பேராலயம் உள்ளிட்ட அனைத்து தேவாலயங்கள், முஸ்லிம் பள்ளிவாசல்களும் மூடப்பட்டுள்ளன. இதனால் பக்தர்கள் மிகுந்த ஏமாற்றமடைந்தனர்.

திருநெல்வேலி

வழக்கமாக ஆடி மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமைகளில் ஏராளமான பக்தர்கள் கோயிலுக்குசென்று சுவாமி தரிசனம் செய்வார்கள். அரசின் தடையுத்தரவால் நேற்று தரிசனம் செய்ய முடியவில்லை. இதனால் வீடுகளிலேயே பலர் வழிபாடுகளை நடத்தினர்.திருநெல்வேலியில் சாலைகுமாரசுவாமி கோயில், வண்ணார்பேட்டை பேராத்து செல்வி அம்மன் கோயில், குறுக்குத்துறை முருகன் கோயில், பாளையங்கோட்டை முருகன் கோயில் உள்ளிட்ட கோயில்கள் மூடப்பட்டிருந்த நிலையில் பக்தர்கள் பலரும் இந்த கோயில்களுக்கு வெளியே வாயில்களில் நின்று சுவாமியை வழிபட்டு சென்றனர்.

மசூதிகளில் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமைகளில் தொழுகை நடைபெறும். முஸ்லிம்கள் ஏராளமானோர் தொழுகையில் ஈடுபடுவார்கள். தடை காரணமாகநேற்று மசூதிகள் திறக்கப்படவில்லை. இதனால், இஸ்லாமியர்கள் வீடுகளிலேயே தொழுகையை நடத்தினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE