திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் புதிய தொழில் தொடங்க ஆர்வமுள்ளவர்களுக்கு மூன்று வெவ்வேறு திட்டங்களின் கீழ் மானியத்துடன் கூடிய கடனுதவி பெறுவதற்கு விண்ணப் பிக்கலாம் என ஆட்சியர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘‘புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவனங்கள் மேம்பாட்டுத் திட்டம் (நீட்ஸ்) கீழ் உற்பத்தி மற்றும் சேவை சார்ந்த தொழில் நிறுவனங்கள் தொடங்க திட்ட முதலீட்டில் 25% மானியம் அல்லது அதிக பட்சமாக ரூ.50 லட்சம் மானியம் வழங்கப்படும். கடனை உரிய காலத்தில் திரும்பச் செலுத்தினால் வங்கிகள் சார்பில் கடனுக்கான வட்டியில் 3% பின்னேற்பு வட்டி மானியம் வழங்கப்படும்.
இந்த திட்டத்தில் தொழில் முனைவோரின் திட்ட மதிப்பீடு குறைந்த பட்சம் ரூ.10 லட்சத்துக்கு மேல், அதிகபட்சம் ரூ.5 கோடி வரை ஆகும். கடன் பெற விரும்புவோர் முதல் தலைமுறை தொழில் முனைவோராக இருக்க வேண்டும். பட்டப்படிப்பு, பட்டயப் படிப்பு, தொழிற்கல்வி பயிற்சி (ஐடிஐ) தேர்ச்சியுடன் 21 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்.
மேலும், பொது பிரிவினர் 35 வயதுக்குள் இருக்க வேண்டும். பெண்கள், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மூன்றாம் பாலி னத்தினர், மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர் போன்ற சிறப்பு பிரிவினர் 45 வயதுக்குள் இருக்க வேண்டும். கடனுதவி பெறும் நபர்களுக்கு 1 மாதம் தொழில் முனைவோர் பயிற்சி அளிக்கப்படும்.
ஏற்கெனவே மத்திய அல்லது மாநில அரசின் கடனுதவி பெற்றவர்கள் இத்திட்டத்தின் கீழ் கடனுதவி பெற இயலாது. விண்ணப்பதாரர் தமிழ்நாட்டில் கடந்த 3 ஆண்டுகளாக தொடர்ந்து வசிப்பவராக இருக்க வேண்டும். கடன் பெற விரும்புவோர் http://www.msmeonline.tn.gov.in/needs என்ற இளையதளம் முகவரியில் விண்ணப்பிக்கலாம்.
அதேபோல், பிரதமரின் வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் உற்பத்தி தொழில்களுக்கு அதிகபட்ச கடனாக ரூ.25 லட்சமும், சேவை சார்ந்த தொழில்களுக்கு அதிகபட்சமாக ரூ.10 லட்சமும் பெறலாம்.
அதிகபட்ச கடன் பெற விரும்பு வோர் 8-ம் வகுப்பு தேர்ச்சியுடன் 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். தனிநபர் தொழில் முனைவோர்கள், உற்பத்தி கூட்டுறவு சங்கங்கள்,சுய உதவிக் குழுக்கள், அறக்கட்டளைகள் ஆகியோர் பயன்பெறலாம்.
பொதுப் பிரிவினர் நகரப் பகுதிகளில் தொழில் தொடங்கினால் திட்ட மதிப்பீட்டில் 15% மானியமும், ஊரகப் பகுதியில் தொழில் தொடங்கினால் 25% மானியமும் வழங்கப்படும். சிறப்பு பிரிவினர்கள் நகர் பகுதிகளில் தொழில் தொடங்கினால் திட்ட மதிப்பீட்டில் 25%, ஊரகப் பகுதியில் தொழில் தொடங்கினால் திட்ட மதிப்பீட்டில் 35% மானியமும் வழங்கப்படும். இந்தத் திட்டத்தில் கடன் பெற விரும்புவோர் http://www.kviconline.gov.in/pmegp என்ற இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம்.
படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பை உருவாக்கும் திட்டத்தின் கீழ் உற்பத்தி தொழில் களுக்கு அதிகபட்சம் ரூ.15 லட்சமும், சேவை தொழில்களுக்கு அதிகபட்சம் ரூ.5 லட்சமும், வியாபாரத்துக்கு அதிகபட்சம் ரூ.5 லட்சமும் கடன் பெறலாம். கடனுதவி பெறுபவர்கள் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பதுடன் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.5 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். பொதுப் பிரிவினர் 18 வயது முதல் 35 வயதுக்குள்ளும், சிறப்பு பிரிவினர்கள் 45 வயதுக்குள் இருக்க வேண்டும். திட்ட மதிப்பில் 25% அல்லது அதிகபட்சமாக ரூ.2.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படும். கடன் பெற விரும்புவோர் http://www.msmeonline.tn.gov.in/uyegp என்ற இளையதள முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும்’’ என தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago