திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் - நடப்பாண்டு மாணவர் சேர்க்கைக்கான வாய்ப்பு அதிகம் : தேசிய மருத்துவ ஆணையக் குழுவின் ஆய்வுக்கு பின் தகவல்

திருப்பூர் - தாராபுரம் சாலையிலுள்ள அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் 11.28 ஹெக்டேர் பரப்பில், ரூ.336 கோடியே 96 லட்சம் மதிப்பில் புதிய அரசு மருத்துவக் கல்லூரி அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, தற்போது, கல்லூரி கட்டிடப் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. மருத்துவமனைக்கான அங்கீகாரச் சான்றிதழ் வழங்கு வது தொடர்பாக, நடைபெற்ற தேசிய மருத்துவ ஆணையக் குழுவினரின் ஆய்வு நேற்று முன்தினம் முடிந்தது.

ஆய்வின் முடிவில், பல்வேறு வழிகாட்டுதல்களை அவர்கள் வழங்கியுள்ளனர். குறிப்பாக, மருந்து வழங்குமிடத்தை விரிவுபடுத்துவது, மருத்துவமனை வளாகத்துக்குள் படுக்கைகளை சீரான இடைவெளியில் அமைத்து சிகிச்சை அளிப்பது உட்பட பல்வேறு திருத்தங்களை கூறியுள்ளனர்.

இதுதொடர்பாக அரசு மருத்துவர்கள் கூறும்போது, "நடப்புக் கல்வியாண்டில் மருத்துவக் கல்லூரியை தொடங்குவதற்கான ஆயத்தப் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறோம். அதேபோல, செப்டம்பர் மாதம் ‘நீட்’ தேர்வெழுதும் மாணவர்கள், இங்கு வந்து படிக்க வாய்ப்புகள் மிக அதிகம். மருத்துவக் கல்லூரி கட்டுமானப் பணிகள் பெரும்பாலும் நிறைவடைந்திருப்பதால், இனி நிர்வாக ரீதியிலான பணிகள் நிறைவடைந்ததும், மருத்துவம் பயிலும் மாணவர்களின் சேர்க்கை நிச்சயம் இருக்கும்.

மத்திய அரசு வழங்கும் அனுமதி சான்று கடிதத்துக்கு பின்னர், பணிகள் வேகமெடுக்கும்" என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE