சூளகிரி அருகே சின்னாறு அணைக்குச் செல்லும் சாலையை சீரமைக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் இருந்து சின்னாறு அணைக்குச் செல்ல சுமார் 7 கி.மீ தார் சாலை அமைக்கப்பட்டுள்ளது. இவ்வழியே வேம்பள்ளி, இண்டிகானூர், கிருஷ்ணேகவுண்டனப்பள்ளி, தாசம்பட்டி, ஒண்டியூர் மற்றும் சுற்றுவட்டாரங்களில் உள்ள 20-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சென்று வருகின்றனர். இதேபோல் சின்னாறு அணையில் இருந்து காளிங்கவரம், ஆவல்நத்தம் கோயில், கொண்டப்ப நாயனப்பள்ளி, நடுசாலை வழியாக வேப்பனப்பள்ளி பகுதியை இணைக்கும் சாலையும் அமைந்துள்ளது.
இப்பகுதியில் விவசாயத்தை பிரதான தொழிலாக கொண்டு வசிக்கும் மக்கள், தங்கள் விளைநிலங்களில் விளையும் காய்கறிகள் உள்ளிட்டவை சூளகிரி சந்தைக்கு கொண்டு சென்று விற்பனை செய்கின்றனர். இந்நிலையில், சின்னாறு அணையில் இருந்து சூளகிரி வரை செல்லும் சாலையில் பல்வேறு இடங்களில் ஜல்லிக்கற்கள் பெயர்ந்தும், குண்டும், குழியுமாக மாறியுள்ளது. இருசக்கர வாகனங்களில் செல்வோர் மட்டுமின்றி, நடந்து செல்பவர்களும் சிரமத்துடன் சென்று வர வேண்டிய நிலை உள்ளது.
இதேபோல் மழைக்காலங்களில் சாலையில் உள்ள பள்ளங்களில் தண்ணீர் தேங்கி நிற்பதுடன், சேறும், சகதியுமாக மாறுவதால் வாகன ஓட்டிகள் கடும் அவதியுடன் சென்று வருகின்றனர். இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் கீழே விழுந்து காயங்களுடன் செல்லும் நிலை காணப்படுகிறது. எனவே, வேப்பனப்பள்ளி - சூளகிரி நகரை இணைக்கும் வகையில் உள்ள இச்சாலையில் சூளகிரி முதல் சின்னாறு அணை வரை சீரமைக்க, தொடர்புடைய அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago