வாழைத்தோட்டம் பகுதியில் வலம் வரும் ரிவால்டோ யானைக்கு பொதுமக்கள் உணவு அளிக்கக் கூடாது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என முதுமலை புலிகள் காப்பக கள இயக்குநர் கே.கே.கவுசல் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நீலகிரி மாவட்டம் வாழைத் தோட்டம் பகுதியில் ரிவால்டோ காட்டு யானையானது நீண்ட காலமாக முகாமிட்டிருந்தது. சுவாசப் பிரச்சினையால் தவித்து வந்த ரிவால்டோ யானையைப் பிடித்து முதுமலையில் சிகிச்சை அளிக்க வனத்துறையினர் முடிவு செய்தனர். அதன் பேரில், கடந்த மே மாதம் வாழைத்தோட்டம் பகுதியில் மரக்கூண்டு (கரால்) அமைத்து, யானையை பிடித்து வனத்துறையினர் அதில் அடைத்தனர். தொடர்ந்து மருத்துவக் குழுவினர் யானையை கண்காணித்து சிகிச்சை அளித்து வந்தனர்.
இந்நிலையில், ரிவால்டோவை வனத்தில் விட வேண்டும் என கால்நடை மருத்துவர்கள் உட்பட பல்வேறு தரப்பினர் அடங்கிய குழு பரிந்துரைத்தது. அதன் பேரில் இரு தினங்களுக்கு முன்பு முதுமலைக்கு உட்பட்ட சிக்கல்லா வனப்பகுதியில் ரிவால்டோ விடுவிக்கப்பட்டது.
மேலும் யானையின் நடமாட்டத்தை கண்டறியும் வகையில் ஜெர்மனி தொழில்நுட்ப முறையிலான ரேடியோ காலர் பொருத்தப்பட்டு உள்ளதால், அதன் மூலம் வனத்துறையினர் ரிவால்டோ யானையின் நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.
இந்நிலையில் இரவோடு இரவாக சிக்கல்லா பகுதியில் இருந்து சுமார் 40 கி.மீ., நடந்து வந்த ரிவால்டோ யானை, தெப்பக்காடு வழியாக மசினகுடி, மாவனல்லா பகுதியை வந்தடைந்தது. தற்போது, யானையின் நடமாட்டத்தை வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.
இந்நிலையில், ரிவால்டோவுக்கு மக்கள் உணவு அளிக்க கூடாது, மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என முதுமலை புலிகள் காப்பக கள இயக்குநர் கே.கே.கவுசல் எச்சரித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறும் போது, ‘ரிவால்டோ யானை உணவுக்காக மரங்களில் இருந்து கிளைகளை உடைத்து சாப்பிட்டு வருகிறது. பொது மக்கள் யாரும் யானைக்கு உணவு அளிக்க வேண்டாம். உணவு அளித்தால் மீண்டும் வனத்துக்குள் அனுப்புவதில் சிரமம் ஏற்படும். மீறி உணவு அளித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கும்கி யானை பசீர் உதவியுடன் ரிவால்டோவின் நடமாட்டத்தை வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். அதேபோன்று தேவர்சோலை பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் சுற்றித்திரி யும் விநாயகன் யானை தொடர் கண்காணிப்பில் இருக்கிறது. குடியிருப்பு பகுதிகளில் உலா வருவதால், அதை வனப்பகுதிக் குள் விரட்ட நடவடிக்கை எடுக்கப் படும்’ என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago