வெள்ளகோவில் அருகே ரூ.70 லட்சம் மதிப்பிலான 14.63 ஏக்கர் கோயில் நிலங்களை, இந்து சமய அறநிலையத் துறையினர் நேற்று மீட்டனர்.
திருப்பூர் மாவட்டம் காங்கயம் வட்டத்தில் கோயில்களுக்கு சொந்தமாக அதிக அளவில் நிலங்கள் உள்ளன. இவற்றை, பல்வேறு மோசடி மூலமாக ஆவணங்களை திருத்தியும், ஆக்கிரமிப்பு செய்து தங்கள் சொந்த நிலம்போல பயன்படுத்தியும், வீட்டுமனைகளாகப் பிரித்து விற்பனை செய்தும் வந்துள்ளனர். இந்த ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்க, இந்து சமய அறநிலையத் துறை தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
அதன் ஒருபகுதியாக, திருப்பூர் மாவட்டம் காங்கயம் வட்டம் லக்குமநாயக்கன்பட்டி கிராமத்திலுள்ள அழகேஸ்வரசாமி கோயிலுக்கு சொந்தமான 14 ஏக்கர்63 சென்ட் புஞ்சை நிலம், வெள்ளகோவில் - தாராபுரம் செல்லும் சாலை லக்குமநாயக்கன்பட்டி ஆண்டிபாளையம் பிரிவிலிருந்து புதுப்பை செல்லும் பாதையில் உள்ளது. இதனை, அதே கிராமத்தைசேர்ந்த 5 பேர், 15 ஆண்டுகளுக்கு மேல் ஆக்கிரமிப்பு செய்திருந்தனர்.
கோயில் நிலத்தை மீட்க இந்து சமய அறநிலையத் துறை சட்டப்பிரிவு 78-ன் கீழ், கோவை இணை ஆணையர் நீதிமன்றத்தில்வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில், 2019 செப்டம்பர் 23-ம் தேதி மேற்படி ஆக்கிரமிப்பாளர் சுவாதீனம் ஒப்படைக்க உத்தரவிடப் பட்டது. ஆனால், நிலத்தை ஒப்படைக்காததால், அறநிலையத் துறை அமைச்சர் மற்றும் ஆணையர் அறிவுறுத்தலின்படியும், இந்து சமய அறநிலையத் துறை திருப்பூர் உதவி ஆணையர் ரெ.சா.வெங்கடேஷ் தலைமையிலும் நேற்று மீட்கப்பட்டது.
காங்கயம் சரக ஆய்வாளர் போ.அபிநயா, செயல் அலுவலர்கள் ரா.தேவிப்பிரியா, மு.ரத்தினாம்பாள், அ.செந்தில் மற்றும் சுந்தரவடிவேல் ஆகியோர் முன்னிலையில் நிலத்தை மீட்டனர். பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணியில் காங்கயம் போலீஸார், வருவாய் துறையினர் ஈடுபட்டிருந்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago