மகசூல் பாதிக்கும் என விவசாயிகள் வேதனை - மரவள்ளியில் செம்பேன் நோய் தாக்குதல்: கட்டுப்படுத்த வேளாண் துறை ஆலோசனை :

நாமக்கல் மாவட்டத்தில் மரவள்ளிக் கிழங்கு செடிகளில் செம்பேன் நோய் தாக்குதல் அதிகமாக இருப்பதால் மகசூல் பாதிக்கப்படும் என விவசாயிகள் கவலை தெரிவித்தனர். நோயை கட்டுப்படுத்த வேளாண் துறை ஆலோசனை தெரிவித்துள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் நாமகிரிப்பேட்டை, சேந்தமங்கலம், ராசிபுரம், வெண்ணந்தூர், மல்லசமுத்திரம், பரமத்தி உள்ளிட்ட பகுதியில் மரவள்ளிக் கிழங்கு அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. இங்கு அறுவடை செய்யப்படும் மரவள்ளி தனியார் சோகோ ஆலை மற்றும் சேலம் சேகோ சர்வ்க்கு விற்பனைக்கு கொண்டு செல்லபபடுகிறது.

இந்நிலையில், மரவள்ளி செடியில் செம்பேன் எனும் நோய் தாக்குதல் ஏற்பட்டுள்ளது. இதனால், செடிகள் கருகி காணப்படுவதுடன் மகசூலும் பாதிக்கும் சூழல் உருவாகியுள்ளது. இது மரவள்ளி சாகுபடி செய்துள்ள விவசாயிகளை கவலையடையச் செய்துள்ளது.

இதுகுறித்து நாமக்கல் மாவட்ட தோட்டக்கலைத் துறை துணை இயக்குநர் எஸ்.கண்ணன் கூறியதாவது:

நாமக்கல் மாவட்டத்தில் 15 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் மரவள்ளி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதில், 1,280 ஹெக்டர் பரப்பளவிலான மரவள்ளி செடியில் செம்பேன் மற்றும் மாவுப்பூச்சி தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ளது.

செம்பேன் நோய் தாக்குதல் ஏற்பட்டால் இலைகளில் உள்ள பச்சைத் தன்மையை உறிஞ்சிவிடும். இதனால், ஒளிச்சேர்க்கை நடைபெறாது. மகசூலும் பாதிக்கும். காற்று மூலம் இந்நோய் பரவக் கூடியது. மூன்று நிலைகளில் இந்நோய் தாக்கம் காணப்படும். நாமக்கல் மாவட்டத்தில் இரண்டாம் நிலையில் நோய் தாக்கம் காணப்படுகிறது.

நோய் தாக்குதலுக்கு உள்ளான விளைநிலங்களை ஏத்தாப்பூர் மரவள்ளி ஆராய்ச்சி நிலையம் மற்றும் கோவை வேளாண் அறிவியல் நிலையத்தில் இருந்து அலுவலர்கள் வந்து பார்வையிட்டுச் சென்றுள்ளனர். இந்நோய் தாக்கம் காணப்படும் செடிகளில் பீனாஸாகுயின், ஓமைட் எனும் பூச்சி மருந்து தெளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு சந்தேகம் இருந்தால் சம்பந்தப்பட்ட தோட்டக்கலைத் துறையினரை அணுகி கூடுதல் தகவல்கள் பெறலாம். இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE