விழுப்புரம், கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் “மக்களைத் தேடி மருத்துவம் திட்டம்” தொடங்கப்பட்டது.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே மேவூர் கிராமத்தில் “மக்களைத் தேடி மருத்துவம்” திட்டத்தை அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், சி.வி. கணேசன் ஆகியோர் நேற்று தொடக்கி வைத்தனர். காட்டுமன்னார்கோவில் வட்டத்தில் கண்டறியப்பட்டுள்ள 9,344 நீழிவு நோய் மற்றும் ரத்தக் கொதிப்பு நோயாளிகளுக்கு வீடுகளுக்கே சென்று இரண்டு மாதத்திற்கான மருத்து பெட்டகம் வழங்கப்படும் என்று அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பஞ்சமாதேவி கிராமத்தில் “மக்களைத் தேடி மருத்துவம்” திட்டத்தை அமைச்சர் பொன்முடி நேற்று தொடக்கி வைத்தார். அப்போது அவர் பேசுகையில், “கண்டமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் 4,942 ரத்த அழுத்தம்,நீரழிவு பாதிப்பு உடையோர் வீட்டிற்கே சென்று மருந்துகள் மற்றும் மாத்திரைகள் வழங்கப்பட உள்ளன” என்றார். இந்நிகழ்ச்சியில் ஆட்சியர் மோகன், சட்டமன்ற உறுப்பினர்கள் புகழேந்தி, லட்சுமணன்,சிவக்குமார், சுகாதாரத் துறை துணை இயக்குநர் செந்தில்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதேபோல் கள்ளக்குறிச்சி மாவட்டம் சிறுவங்கூர் கிராமத்தில் இத்திட்டத்தினை அமைச்சர் பொன்முடி தொடக்கி வைத்தார். மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர் தலைமை தாங்கினார். இதுகுறித்து அமைச்சர் பொன்முடி கூறியது:
தமிழக முதல்வர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டதால் தமிழகத்தில் கரோனா தொற்று கட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக, மக்களைத் தேடி மருத்துவர் என்ற உன்னதமான திட்டத்தினை முதல்வர் அறிமுகப்படுத்தியுள்ளார். இத்திட்டத்தின்கீழ் 45 வயதிற்கு மேற்பட்ட பட்டியலிடப்பட்ட தொற்றா நோய் உள்ள நோயாளிகளுக்கு அவர்களின் இருப்பிடத்திற்கே சென்று சிகிச்சை அளித்து 2 மாதங்களுக்குத் தேவையான மருந்து பெட்டகங்கள் வழங்கப்பட உள்ளன. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 51,341 தொற்றா நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், 1,125 இயன்முறை சிகிச்சை தேவைப்படும் நபர்களுக்கும், 918 நோய் ஆதரவு சிகிச்சை தேவைப்படும் நபர்களுக்கும் இத்திட்டம் மிகப் பயனுள்ளதாக அமையும். இந்த திட்டம் படிப்படியாக அனைத்து கிராமங்களிலும், துணை சுகாதார நிலையம் அடிப்படை அலகாகக் கொண்டு செயல்படுத்தப்படும் என்றார். விக்கிரவாண்டி சட்டப்பேரவை உறுப்பினர் ந.புகழேந்தி, சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் டி.என்.சதீஷ்குமார், கள்ளக்குறிச்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் உஷா, கண்காணிப்பாளர் நேரு, இயன்முறை மருத்துவர்கள், மருத்துவ தன்னார்வலர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago