கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே சாமனப்பள்ளி கிராமத்தில் இன்று (5-ம் தேதி) மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
சென்னையில் இருந்து நேற்று தனி விமானம் மூலம் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூருக்கு வந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ஓசூரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கினார். இன்று (5-ம் தேதி) காலை 9.50 மணிக்கு வேப்பனப்பள்ளி சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட சூளகிரி ஒன்றியம் சாமானப்பள்ளி கிராமத்தில் 'மக்களைத் தேடி மருத்துவம்' என்கிற திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இதனைத் தொடர்ந்து முதலில் சாமனப்பள்ளி கிராமத்தில் பயனாளியின் இல்லத்திற்கே நேரடியாகச் சென்று மருந்து, மாத்திரைகளை முதல்வர் வழங்குகிறார். 2-வது பயனாளியின் வீட்டிற்கு சென்று பயனாளிக்கு அளிக்கப்படும் இயன்முறை சிகிச்சையை பார்வையிடுகிறார். இத்திட்டத்திற்காக செவிலியர் மற்றும் இயன்முறை சிகிச்சையாளர்களுக்கு 3 புதிய வாகனங்களை வழங்கி தொடங்கி வைக்கிறார். பின்னர், விழா மேடைக்கு வந்து காணொலிக் காட்சி மூலமாக 7 மாவட்டங்களில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தை முதல்வர் பார்வையிடுகிறார்.
மலைவாழ் மக்களுக்கான 108 அவசர ஆம்புலன்ஸ் சேவை, மஞ்சள் காமாலை நோய்க்கான விரைவு பரிசோதனை திட்டங்களையும், காணொலிக் காட்சி மூலமாக பெரு நிறுவனங்களின் சமூக பொறுப்புணர்வு நிதியின் கீழ் ஒரு லட்சம் தொழிலாளர்களுக்கு இலவச கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாமை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இந்நிகழ்வுகளில் பங்கேற்ற பின்னர் முதல்வர்,ஓசூரில் இருந்து சென்னைக்கு விமானத்தில் புறப்பட்டு செல்கிறார். இதற்காக ஓசூர், சூளகிரி பகுதிகளில் போலீஸார் பாதுகாப்பினை பலப்படுத்தி உள்ளனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago